‘அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க முடியாதே…’ என ஒரு ரசிகையிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘அதெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். மனசு இருந்தா என்ன வேணா பண்ணலாம். காலையில செக்ரடேட். ஈவ்னிங் ஷூட்டிங்னு கூட போவாரு. எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை…’ என்றவுடன் நடுங்கிவிட்டேன்.
‘எங்க தலைவர் அடுத்த தேர்தல்ல சி.எம் ஆவாரு…’ என அடித்துக் கூறிய இன்னொரு ரசிகையிடம் ‘அப்போ களத்துல விஜய்யும் இருப்பாரே. விஜய் vs தனுஷ்ணு போட்டி இருக்குமா…’ என்றேன். ‘அவர் ஒரு பக்கம் சி.எம் ஆ இருக்கட்டும். இன்னொரு பக்கம் எங்க தலைவர் சி.எம் ஆ இருக்கட்டும்’ என போயஸ்கார்டனே அதிருமளவுக்கு ஒரு பதிலை சொன்னார்.
இதற்கு மேல் பேச்சுக் கொடுத்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து ஒரு நாட்டை விஜய்யிடமும் ஒரு நாட்டை தனுஷிடமும் கொடுங்கள் என உரிமைப் பிரச்னையை எழுப்பிவிடுவார்களோ என்கிற ஐயத்தில் கிறங்கி போய் ஒரு ஓரமாக உட்கார்ந்தேன்

திடீரென சஃபாரி போட்ட பவுன்சர்கள் சிலர் வந்திறங்கினர். கூட்டம் கூடியதை அறிந்து உளவுத்துறையினர் சிலரும் தனுஷின் வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தனர். கூட்டத்தை புகைப்படமும் வீடியோக்களும் எடுத்து தலைமைக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தனர். அது சரி, கூட்டம் சேர்க்கும் யாரையும் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாத காலமல்லவா இது!
தனுஷ் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த ரசிகர்கள் கொஞ்சம் விவரமானவர்கள் என்பதையும் அறிய முடிந்தது. தனுஷ் வீட்டு முன்பு எந்த வண்டியையும் நிறுத்தாமல், தனுஷின் அண்டை வீட்டாரின் கேட்டுகளை திறக்க முடியாதபடிக்கு பைக்குகளை நிறுத்திவிட்டனர். ‘ஊருக்கே ஸ்டாராக இருந்தாலும்…எங்களுக்கு நீங்க குழாயடி சண்டை போடுற பக்கத்து வீட்டுக்காரர்தான்…’ என்கிற மோடில் இருந்த அண்டை வீட்டினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொல்ல லோக்கல் காவலர்களும் ஸ்பாட்டுக்கு வந்தனர். ‘சீக்கிரம் முடிச்சு விடுங்க சார்…கம்ப்ளௌண்ட் ஆகுது..’ என அவர்கள் அவசரப்படுத்த எப்படியும் அந்த கேட் திறந்துவிடும் என ரசிகர்கள் இன்னும் போர்ஸாக கேட்டை முட்டினர்.