தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி உதவியாளராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பல முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால், இவரை மாவட்ட ஆட்சியர் ரேவதி ஜூலை 6ம் தேதி பணி நீக்கம் செய்தார். மேலும், இந்தப் பணியிடத்துக்கு தற்காலிகமாக பெண் பணியாளர் சினேகா என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட சுதர்சன் ஜூலை 25ம் தேதி மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார். இதைப் பார்த்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் குலோத்துங்கன் கேள்வி எழுப்பி வீடியோவும் எடுத்தார். அப்போது, `சார், உங்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். நீங்க எப்படி இங்கு உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள்?” என குலோத்துங்கன் கேட்டார். உடனே சுதர்சன், `உங்களுக்கு என்ன வந்துச்சி?’ எனக் கேட்க, `இது என்னோட டிபார்ட்மென்ட், என்னோட செக்ஷன்’ என்றார் குலோத்துங்கன்.