மாற்றம் = பெயர் மாற்றம்…? 10 திட்டத்திற்கு பெயரை மாற்றிய தவெக அரசு..! – Kumudam

Spread the love

திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நலத்திட்டங்கள் புதிய பெயர்களுடன் அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது. புதிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலேயே அரசு கவனம் செலுத்தியதாக திமுக விமர்சித்துள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘நான் முதல்வன்’ திட்டம் ‘வெற்றி திறன் பயிற்சி திட்டம்’, ‘முதல்வர் படைப்பகம்’ ‘டிஜிட்டல் நூலகம்’, ‘கலைஞர் கனவு இல்லம்’ ‘வெற்றி வீடு வழங்கும் திட்டம்’ என மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு அப்பாற்பட்டும், மகளிர் நில உரிமை, பள்ளிகள், முதியோர் நலன் உள்ளிட்ட பல திட்டங்களுக்கும் புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், சில திட்டங்களில் பெயர் மாற்றத்துடன் சேவைகளிலும் மேம்பாடுகள் இடம்பெறும் என அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. உதாரணமாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட பெயர்கள்:

  1. உலகம் உங்கள் கையில் – வெற்றி மடிக்கணினி திட்டம்
  2. முதல்வர் படைப்பகம் – டிஜிட்டல் நூலகம்
  3. அன்புச்சோலை திட்டம் – மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்
  4. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் – பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்
  5. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் – மண்ணின் மகள் திட்டம்
  6. விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் – நவீன மிதிவண்டி திட்டம்
  7. நான் முதல்வன் – வெற்றி திறன் பயிற்சி திட்டம்
  8. வெற்றி தொழில் முனைவோர் திட்டம்
  9. கலைஞர் கனவு இல்லம் – வெற்றி வீடு திட்டம்
  10. VBGRAMG துணை திட்டம் – வெற்றி 150

இந்த நிலையில், மின்வெட்டு, காவிரி நீர், நீட், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், திட்டங்களின் பெயர் மாற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தவெக அரசு மீது திமுக விமர்சனம் செய்து வருகிறது. இதற்கு மாறாக, திட்டங்களை புதிய நோக்கத்துடன் மறுசீரமைத்து செயல்படுத்துவதற்காகவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பினர் வாதிடுகின்றனர்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த பெயர் மாற்றங்கள் நிர்வாக மாற்றமா அல்லது அரசியல் அடையாள மாற்றமா என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *