கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி நாகர்கோவில் வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட்ப்ரேக் பழுதானதால் சரி செய்வதற்காக ரயில் நிலைய யார்டில் நிறுத்தி சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட்டயத்திற்கு ரயிலை இயக்குவதற்காக ரயில் பெட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெட்டிக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த ஊழியர்கள் பெட்டிக்குள் சோதனை நடத்தினர். அப்போது பெட்டியின் இருக்கைக்குக் கீழ் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடப்பதைக் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் இறந்த பெண்ணுக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என்பதும், பெண்ணின் இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மேலும் அந்தப் பெண் இறந்து 5 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகி விட்டது. எனவே யாரோ பெண்ணை அடித்துக் கொலை செய்து ரயில் பெட்டிக்குள் போட்டுவிட்டு தப்பியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். இதனை அடுத்து ரயில்வே போலீசார் சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றம் செய்து இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக ரயில் நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்தனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில், கடந்த 14-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைமேடை எண் 5-ல் நின்ற ரயிலில் மாற்றுத் திறனாளிகள் பெட்டியின் அருகே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நடந்து வருவது தெரியவந்தது. அதிகாலை நேரத்தில் தனியாகப் பெண் ஒருவர் வருவதைக் கண்ட செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (31), அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, ஆட்கள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.