மிதமான வெள்ள அளவை நிர்வகித்தல்; 1932ல் நாள் ஒன்றுக்கு சுமார் 400 அழைப்புகள் | மேட்டூர் அணை ஓசை 32

Spread the love

நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி இருக்கும் போது, அணையின் மேல் பகுதியின் சுவர், நீரின் அழுத்தத்தால் ஏதேனும் இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகுமா? இந்தக் கேள்வி குறித்து காலம் சென்ற ஒரு தலைமைப் பொறியாளர் சந்தேகம் எழுப்பி அது குறித்த ஆராய்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் அந்த சமயத்தில் பல அங்குலங்கள் அணையின் மேல் பகுதியில் இடப்பெயர்ச்சி இருக்கும் என்று கணக்கெட்டு தெரிவித்தார். அதாவது, அணையின் மேற்சுவர் சிறிது வளைந்து கொடுக்கும் என்பது அவரின் கணிப்பாக இருந்தது. மேலும் முடிக்கப்பட்ட அணையின் உண்மையான கண்காணிப்பின் மூலம் அவரது கோட்பாடு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் விரும்பினார்.

அதன்படி, 1934 ஆம் ஆண்டு வறண்ட வானிலை இருந்தபோது நீர்த்தேக்கத்தில் நீர் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது அணையின் மேல் புறத்தில் அமைந்திருந்த சாலையின் மையத்தில் 500 அடி இடைவெளியில் “பித்தளை வட்டுக்கள்” கான்கிரீட் தளத்தில் பதிக்கப்பட்டன. அணையின் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நிரந்தர “தியோடலைட்” கருவிகள் மூலம் ஒவ்வொரு வட்டுக்களின் மையக் கோடுகள் கண்டறியப்பட்டு அதன் மேல் கோடுகள் வரையப்பட்டன. ஒளிவிலகல் காரணமாக பிழைகள் ஏற்படாதிருக்க இந்த வேலை இரவு நேரத்தில் செய்யப்பட்டது.

அந்த ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், உச்சத்தை எட்டியது. அப்போது வட்டுகளில் வரையப்பட்ட மையக்கோடுகளை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மிகவும் கவனமாக கையாண்ட பரிசோதனை முயற்சி இது!

ஆனால், மையக்கோடுகளில் சிறிதளவு விலகல் கூட ஏற்படவில்லை. இதனால் மேலே குறிப்பிட்ட கோட்பாடு தவறான தரவுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். எனவே, அணையின் ஏரி முழுவதும் நிரம்பி உச்சமட்டத்தில் இருந்தாலும் மேல்புறத்தில் உள்ள நீர் அழுத்தத்தின் காரணமாக அணையின் மேல் புறத்தில் மையக்கோட்டில் எந்த விலகலும் இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறலாம் என்று பொறியாளர்கள் அப்போதே முடிவை அறிவித்தனர்.

அதனால், இந்த சந்தேகம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு எழுந்தது.

மேட்டூரில் வானிலை ஆய்வுகள்

மேட்டூர் கிராமத்தை அணைத் திட்ட ஊழியர்கள் ஆக்கிரமித்ததற்கு முன் வானிலை ஆய்வு மையம் எதுவும் அங்கே இருக்கவில்லை. அந்த இடத்தில் மழைப்பொழிவு அளவுகள் போன்ற எந்தவொரு தரவுகளும் கிடைக்கவில்லை.

தமிழக எல்லை பிலிகுண்டலு

தமிழக எல்லை பிலிகுண்டலு

1927 -ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு மழைமானி நிறுவப்பட்டது. மேலும் 1928-ல் விரிவான சாதனங்கள் பொருத்தப்பட்டு வேறு அளவுகளை பதியும் பணி துவக்கப்பட்டது. மேட்டூரின் புவியியல் அமைப்பு கடுமையான சூறாவளி, புயல்களுக்கு உட்பட்ட இடமாக இருந்ததால், காற்றின் வேகத்தை பதிவு செய்வது அவசியம் என்று கருதப்பட்டது.

இத்தகைய காற்றின் வேகம் அணை கட்டுமான பகுதியில் நிறுவப்படும் இரும்பினால் ஆன கான்கிரீட் கோபுரங்களை (நாம் முன்பு கண்ட கறுப்பு, சிகப்பு கோபுரங்கள்) நிர்மாணிப்பதில் உறுதுணையாக இருக்கும் என்று உணரப்பட்டது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பற்றிய பதிவுகளும் தேவைப்பட்டன. ஏரியில் நீர் ஆவியாவது குறித்த கணக்கீடுகள், ஆவியாதலினால் ஏற்படும் இழப்புகள் இவற்றை கணக்கிடுதல் முக்கியத் தேவையாக இருந்தது.

அணையின் ஏரியில் நீர் ஆவியாதல் ஆண்டுக்கு சுமார் 9 அடி அளவுக்கு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. அணையின் கொள்ளளவு, மழை மற்றும் நீர் ஆவியாதல் என்ற இரண்டையும் பொறுத்து மாறும் தன்மை உடையது.

மேட்டூர் வானிலை மையம், “சைமன்ஸ்” மழைமானி, வெப்பமானிகள் மற்றும் ஈரப்பதத்தை அளக்கும் கருவி, காற்றின் வேகத்தை அளக்கும் கருவிகள், நீர் ஆவியாதலை அளக்கும் உலோக தட்டு போன்ற கருவிகளை நிர்மாணித்து பயன்பாட்டுக்கு வந்தது. இவை அனைத்தையும் கம்பி வேலியிட்ட 25 அடி சதுர இடத்தில் அமைக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *