Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பவுலிங்கை அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக ஜடேஜாவின் பவுலிங்கில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறிய அஸ்வின், அவர் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் ஆல்ரவுண்டராக மாறி வருவதாகவும் பேசி இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களை குவித்த போது, இலங்கை அணி 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 193 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி 206 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். அதேபோல் இளம் ஸ்பின்னர் மானவ் சுதார் மொத்தமாக இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்திய அணியின் வெற்றி தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அணிக்கு இது மிகச்சிறந்த வெற்றி. படிக்கல், மானவ் சுதார், கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார்கள்.
அதேபோல் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா அவர்களின் பங்கை சரியாக செய்துவிட்டனர். துருவ் ஜுரெல் முதல் இன்னிங்ஸிலும், ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸிலும் தரமான பேட்டிங்கை ஆடினார்கள். சுப்மன் கில்லின் கேப்டன்சி தரமாக இருந்தது. ஆனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு கை வரவில்லை, குல்தீப் யாதவ் பவுலிங் செய்யவே வரவில்லை. அதுதான் எனக்கு சிக்கலாக தெரிகிறது.
மானவ் சுதார் மற்றும் ஜடேஜா இருவருமே வேறு மாதிரியான பவுலர்கள். என்னை பொறுத்தவரை ஜடேஜாவின் இடத்தை நிரப்ப சரியான வீரராக மானவ் சுதார் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஜடேஜா பழைய ஜடேஜா போல் பவுலிங் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு கை வரவில்லை. அதற்கு அவரின் வயதும் ஒரு காரணம். அவர் பவுலிங் ஆல்ரவுண்டரில் இருந்து பேட்டிங் ஆல்ரவுண்டராக மாறி வருகிறார்.
இனி வரும் காலங்களில் ஜடேஜாவால் பேட்டிங்கில் அதிக பங்களிப்பு செய்ய முடியும். பவுலிங்கில் அவரின் பங்களிப்பு குறையும். இதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார். அஸ்வினின் பேச்சுகளை கேட்கும் போது, ஜடேஜா 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின், இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தற்போது வரை ஜடேஜா 90 டெஸ்டில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தகக்து.

