அஞ்சல் துறை சமீபத்தில் அஞ்சலக சேமிப்பு வங்கியின் (POSB) திருத்தப்பட்ட கோர் பேங்கிங் சொல்யூஷன் (CBS) கையேட்டை வெளியிட்டுள்ளது.
அந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய விதிகள்:
1. குறைந்தபட்ச இருப்புத் தொகை
சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ.500 இருப்பு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கத் தவறினால், ஆண்டுக்கு ரூ.50 (18% ஜிஎஸ்டி உட்பட) அபராதக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும்.
கணக்கில் இருப்புத் தொகை ஜீரோவாக இருந்தால், அந்தக் கணக்கு தானாகவே மூடப்பட்டுவிடும்.

2. செயலற்ற கணக்குகள் (Silent Accounts)
தொடர்ந்து மூன்று முழு நிதியாண்டுகளுக்கு எந்தவொரு டெபாசிட்டோ அல்லது பணம் எடுக்கும் பரிவர்த்தனையோ நடைபெறவில்லை என்றால், அந்தக் கணக்கு ‘செயலற்ற கணக்காக’ மாற்றப்படும்.
கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுவது பரிவர்த்தனையாகக் கருதப்படாது.
3. கணக்கு மாற்றம்
ஒரு அஞ்சலகத்திலிருந்து மற்றொரு அஞ்சலகத்திற்குச் சேமிப்புக் கணக்கை மாற்ற ரூ.100 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி (GST) கட்டணம் வசூலிக்கப்படும்.
4. இறப்பு உரிமைகோரல்கள்
கணக்கில் வாரிசுதாரர் பதிவு செய்யப்பட்டிருந்தால், எவ்வித உச்சவரம்பும் இன்றி (எவ்வளவு தொகையாக இருந்தாலும்) பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
வாரிசுதாரர் நியமிக்கப்படாத பட்சத்தில், உரிய நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான தொகையை வாரிசு சான்றிதழ் இல்லாமலேயே பெற்றுக்கொள்ளலாம்.

5. முன்கூட்டியே கணக்கை முடித்தல்
நவம்பர் 10, 2023 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ தொடங்கப்பட்ட 5 ஆண்டு கால வைப்பு நிதிக் கணக்குகளை, 4 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பு முன்கூட்டியே மூட முடியாது.
6. பணம் எடுப்பதற்கான TDS
உரிய வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு, ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு, ரூ.20 லட்சத்திற்கு மேல் எடுத்தால் 2% மற்றும் ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 5% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
7. பாஸ்புக் அப்டேட்
ரெக்கரிங் டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களுடைய பாஸ்புக்கை குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும்.
8. மற்ற அஞ்சலகங்களில் பணம் எடுக்கும் வரம்பு
கணக்கு தொடங்கப்பட்ட கிளை அல்லாமல், மற்ற அஞ்சலகக் கிளைகளில் POSB காசோலை மூலம் ஒரு நாளில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாகப் பணம் எடுக்க முடியாது.

9. பரிவர்த்தனை சரிபார்ப்பு
ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனை செய்யும்போது மொபைல் எண் சரிபார்க்கப்படும்.
ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனை செய்யும்போது பான் கார்டு விவரம் சரிபார்க்கப்படும்.
10. பி.பி.எஃப்
குறைந்தபட்ச வருடாந்திர டெபாசிட்: ₹500.
அதிகபட்ச வருடாந்திர டெபாசிட்: ₹1.5 லட்சம்.
இந்தத் தொகையைத் தவணைகளாகவோ அல்லது மொத்தமாக ஒரே தவணையிலோ செலுத்தலாம். ஒரு நிதியாண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்; எண்ணிக்கைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை!