மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திரக் கலைஞராக மக்கள் மனங்களை வென்ற தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சலிம்குமார் (57) காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாக எர்ணாகுளம் அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு 10.45 மணியளவில் காலமானார். நேற்று அதிகாலை டயாலிசிஸ் செய்வதற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, டயாலிசிஸ் நடைமுறையின் போது திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவருக்கு, தற்போது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த நடிகர் சலிம்குமாரின் உடல் பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9 மணி முதல் பறவூர் டவுன் ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை பறவூரில் உள்ள அவரது வீட்டு வளப்பத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

1969-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம், பறவூர் சிற்றாற்றுகரையில் கங்காதரன் மற்றும் கௌசல்யா தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்தார் சலிம்குமார். கொச்சின் கலாபவன், கொச்சின் சாகர் போன்ற புகழ்பெற்ற மிமிக்ரி குழுக்கள் மூலம் மேடை கலைஞராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் கலைத்துறையில் நுழைந்தார். 1996-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சுனிதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு சந்து மற்றும் ஆரோமல் என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு அடுத்த நாளான செப்டம்பர் 15 அன்றே, தனது முதல் திரைப்படமான “இஷ்டமானு நூறுவட்டம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கிய சலிம்குமார், மீசை மாதவன், தென்காசிப்பட்டணம், சதிகாத்த சந்து, சி.ஐ.டி மூசா, திலக்கம், கல்யாணராமன் போன்ற 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை முகமாக மாறினார்.