மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

Spread the love

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே… இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு கடும் நிதிச் சிக்கலை எதிர்க்கொண்டு வருகின்றனர். அதன் சாட்சியாக இருப்பதே விலைவாசி உயர்வு. இந்த விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது எரிபொருள் பற்றாக்குறை. இந்தியா தனது ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் சுமார் 80%-க்கும் மேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், அதன் நேரடித் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் உடனடியாகப் பிரதிபலிப்பது வழக்கம்.

ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான சர்வதேச அரசியல் நிலவரங்கள் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த எரிபொருள் விலை உயர்வு, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஒரு புதிய பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலையைக் கண்டித்தும், லாரி தொழிலைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. நாமக்கல் மற்றும் சேலத்தில் நடைபெற்ற சம்மேளனத்தின் உயர்மட்டச் செயற்குழுக் கூட்டத்தில், அதன் மாநிலத் தலைவர் தன்ராஜ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், செய்தியாளர்களைச் சந்தித்த தன்ராஜ், “டீசல் விலை உயர்வு மற்றும் லாரி தொழில் சந்தித்து வரும் கடுமையான நலிவு காரணமாக, வரும் 15.06.2026 (திங்கட்கிழமை) முதல் லாரி வாடகை கட்டணத்தை 25% உயர்த்த ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபகாலமாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.8-க்கும் மேல் உயர்ந்துள்ளதற்கு பலத்த கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

லாரி

மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். மத்திய அரசு டீசல் விலையைக் குறைக்கும் என்று இத்தனை நாள்களாகப் பொறுத்துப் பார்த்தோம். ஆனால், இனிமேலும் தற்போதைய வாடகையை வைத்துக்கொண்டு தொழிலை நடத்தவே முடியாது என்ற இறுதி கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதால்தான் இந்த 25% வாடகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வாடகை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கும், விலைவாசி உயர்வு போன்ற அசௌகரியங்களுக்கும் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பொதுமக்கள் இந்த உயர்வை ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.

பெட்ரோல், டீசல் வில உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு என மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் நடுத்தரக் குடும்பத்துக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக லாரி வாடகையின் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும்போது, மாவட்டங்களுக்கு இடையேயான சரக்குக் கட்டணம் கணிசமாக உயரக்கூடும். நாமக்கல் – சென்னை தற்போது 25 டன் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக லாரிக்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வீதம் ரூ.25,000 வசூலிக்கப்படுகிறது. புதிய உயர்வின்படி இது ரூ.31,000 ஆக அதிகரிக்கும். அதாவது கூடுதலாக ரூ.6,000 வரை உயரும். இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொருப் பகுதிக்கு ஏற்றவாறு விலையில் மாற்றம் இருக்கும். மேலும், கிலோமீட்டர் அடிப்படையிலான கட்டணங்களும் மாற்றியமைக்கப்படும். அதாவது டிப்பர் லாரிகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ.10 – ரூ.25 லிருந்து ரூ.12 – ரூ.30 ஆகவும், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு (Tempo/Ace) ரூ.20 – ரூ.50 லிருந்து ரூ.23 – ரூ.60 ஆகவும் உயரும். கன்டெய்னர் லாரிகளுக்கான கட்டணம் கிலோமீட்டருக்கு ரூ.35 – ரூ.85 என்ற அளவிலிருந்து ரூ.50 – ரூ.110 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரிகள்
லாரிகள்

பெட்ரோல், டீசல் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு என்பது வெறும் ஒரு குறிப்பிட்ட துறையோடு நின்றுவிடக்கூடியது அல்ல. இது ஒரு சங்கிலித் தொடர்பு போல நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும், சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 6.5 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. அதேப்போல இந்தியாவின் மொத்த சரக்கு போக்குவரத்தில் 70%-க்கும் அதிகமான பங்களிப்பை லாரிகளே கொண்டிருக்கின்றன. எனவே, இந்த 25% வாடகை உயர்வு நுகர்வோரான சாமானியப் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கப் போகிறது.

தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் பெரும்பாலும் லாரிகள் மூலமாகவே வெளிமாநிலங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. லாரி வாடகை 25% உயரும்போது, அந்த கூடுதல் போக்குவரத்துச் செலவை வியாபாரிகள் தங்களின் நுகர்வோர் பொருள்கள் மீதே திணிப்பார்கள். இதன் காரணமாக, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களைப் பெருநகரச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல லாரிகளையே நம்பியுள்ளனர். போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும்போது, சந்தையில் அதற்கேற்ற விலை கிடைக்காவிட்டால், விவசாயிகள் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் குறைந்த லாபத்திற்கோ அல்லது நஷ்டத்திற்கோ பொருள்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும்.

சந்தை

தமிழ்நாட்டில் ஏற்கெனவே மணல், சிமென்ட், ஜல்லி, செங்கல் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இவை அனைத்தும் லாரிகள் மூலமாகவே கட்டுமான இடங்களுக்குக் கடத்தப்படுவதால், இந்த வாடகை உயர்வு கட்டுமானச் செலவை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். இது சொந்த வீடு கட்ட நினைக்கும் நடுத்தர மக்களின் கனவில் பேரிடியாக அமையும்.

இதுமட்டுமல்லாமல், தற்காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்லைன் வர்த்தகப் பொருள்களும் பெருமளவில் லாரிகள் மூலமாகவே விநியோகம் செய்யப்படுவதால், இணையவழி ஆர்டர்களின் டெலிவரி கட்டணங்களும் உயர வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான இரும்பு, பிளாஸ்டிக், ரசாயனம் போன்ற மூலப்பொருள்களைக் கொண்டு வரும் செலவு அதிகரிப்பதால், உற்பத்திச் செலவும் உயரும். இந்த வாடகை உயர்வால் மொத்த சந்தையிலிருந்து பொருள்களை வாங்கி விற்கும் சிறு, குறு வியாபாரிகளின் லாப வரம்பு கடுமையாகக் குறையும். இதன் காரணமாக அவர்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

விஜய், மோடி
விஜய், மோடி

எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி லாரி வாடகை, ஹோட்டல் உணவுகள், ஆட்டோ கட்டணங்கள் ஆகியவை உடனடியாக உயர்த்தப்பட்டாலும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் காலங்களில், இந்த வாடகைக் கட்டணங்களோ அல்லது பொருள்களின் விலையோ குறைக்கப்படுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது. “விலையை ஏற்றியவர்கள் ஏன் குறைப்பதில்லை?” என்ற கேள்வியும், அதற்குப் பல்வேறு துறையினர் சாக்குபோக்குகள் கூறுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்தச் சிக்கல் குறித்து விவரமறிய பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் பேசினோம். அவர், “நாம் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். இதன் விலை கடந்த சில மாதங்களில் 50%-க்கும் மேல் உயர்ந்துவிட்டது. இதனால் எந்தவொரு அரசாங்கமும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதுபோதாதென்று, இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், எரிபொருள் வாங்குவதற்கான செலவு மேலும் 10% அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலைதான் ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கும் முக்கியக் காரணம். ஏனெனில், உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து சந்தைகளுக்குப் பொருள்கள் வாகனங்கள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் எரிபொருள் விலை உயரும்போது, அது மற்ற அனைத்துப் பொருள்களின் விலையையும் சங்கிலித் தொடர் போல உயர்த்திவிடுகிறது.

பொருளாதார நிபுணர் நாகப்பன்
பொருளாதார நிபுணர் நாகப்பன்

நிலைமை இப்படி இருந்தாலும், அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அமைதியாக வேடிக்கை பார்க்காமல், விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்மாதிரியாக, அரசாங்கம் முதலில் தனது தேவையற்ற மற்றும் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகள் இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைத் தங்களது அரசுப் பணிகளிலும், சொந்தக் குடும்ப வாழ்க்கையிலும் பொதுமக்களுக்குச் செய்து காட்ட வேண்டும். அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் மட்டுமே, சாதாரண மக்களும் அவர்களைப் பின்பற்றத் தூண்டுகோலாக இருக்கும்.

ஒருபுறம் அரசு தனது செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும். அதே நேரத்தில், அரசின் வருவாயைப் பெருக்க ஆடம்பரப் பொருள்களின் மீதான வரியை உயர்த்தலாம். மேலும், நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க, வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பதிலாக உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பணம்
பணம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு என ஏற்கெனவே பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சாமானிய மக்களின் தலையில், இந்த 25 சதவிகித லாரி வாடகை உயர்வு மேலும் ஒரு சுமையாக மாறப்போகிறது. ஜூன் 15 முதல் அமலுக்கு வரும் இந்த முடிவினால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் உருவாகியுள்ளது. லாரி உரிமையாளர்களின் தரப்பில் நியாயம் இருந்தாலும், இதன் இறுதிப் பாதிப்பு சாமானிய நுகர்வோரின் பாக்கெட்டையே பதம் பார்க்கப் போகிறது என்பது கசப்பான உண்மையாகும்.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *