Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் விளையாட வாய்ப்பில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். குர்னூர் ப்ரார் களமிறங்க உள்ளதாக கூறியுள்ள அஸ்வின், சிராஜ் மீண்டும் தனது பயிற்சியை அதிகரித்து வேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை அதிகாலை தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துவிட்ட சூழலில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வில் செய்த தவறை மீண்டும் கேப்டன் சுப்மன் கில் செய்யக் கூடாது என்று ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக சிராஜ் மற்றும் பும்ராவை வைத்து அட்டாக்கை தொடங்க வேண்டும் என்று, பேச்சுகள் அதிகரித்துள்ளன. பிரசித் கிருஷ்ணா அல்லது அன்சுல் கம்போஜ் இருவரில் ஒருவரை பெஞ்ச் செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், எல்லா தடைகளும் நீங்கிவிட்டது.. நாளை குர்னூர் ப்ரார் மைதானத்தில் அனல் பறக்கவிடுவதை பார்க்க தயாராவோம்.. முகமது சிராஜ் மீண்டும் பவுலிங் பயிற்சியை அதிகரித்து, பழைய வேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலமாக மீண்டும் முகமது சிராஜ் பெஞ்ச் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அன்சுல் கம்போஜ் இடத்தில் குர்னூர் ப்ரார் சேர்க்கப்படலாம் என்றும் பார்க்கப்படுகிறது. மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் சிராஜ், இந்த டெஸ்ட் தொடருக்காக மட்டும் சுமார் ஒரு மாதமாக பயிற்சி போட்டிகளில் விளையாடி தயாராகி இருக்கிறார்.
முன் கூட்டியே நியூசிலாந்து வந்த சிராஜ், 3 பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனாலும் அவரை கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கவில்லை. அதனை கண்டித்து சீனியர்கள் பலரும் விமர்சித்தனர். தற்போது இந்திய அணி மீண்டும் அதே தவறை செய்வதாக பார்க்கப்படுகிறது.
