நாம் பயன்படுத்தும் Fork (முட்கரண்டி) ஏன் பெரும்பாலும் 4 முட்களை மட்டுமே கொண்டுள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது எதேச்சையாகவோ அல்லது தற்செயலாகவோ அமைந்தது அல்ல; பல நூற்றாண்டுகளாக நடந்த வடிவமைப்பு பரிணாமம் இது.

முட்கரண்டியின் வரலாறு மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமில் இது சமையலறைக் கருவியாகவே இருந்தது. ஆரம்ப காலத்தில், குறிப்பாக 11-ம் நூற்றாண்டுவாக்கில் பைசண்டைன் பேரரசில் (Byzantine Empire) உணவு உண்ணப் பயன்படுத்தப்பட்ட முட்கரண்டிகள் இரண்டு முள்களுடன் மட்டுமே இருந்தன.
இவை இறைச்சியைக் குத்தி எடுக்கவும் வெட்டவும் மட்டுமே பயன்பட்டன. ஆனால், உதிரியான உணவுகள், சோறு, பட்டாணி போன்றவற்றை அள்ளிச் சாப்பிட இவை வசதியாக இல்லை; உணவுகள் எளிதில் கீழே சிந்தின.
பின்னர் இனிப்புகள் சாப்பிட மூன்று முட்கள் கொண்ட முட்கரண்டிகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் அவை பிரதான உணவுகளுக்கு முழுமையான தீர்வைத் தரவில்லை.
4 முள்கள் ஏன்?
18-ம் நூற்றாண்டுகளில் ஜெர்மன், பிரெஞ்சு கைவினைஞர்கள் 5, 6 முள்கள் கொண்ட கரண்டிகளையும் பரிசோதித்தனர். ஆனால், இதில் இரு முக்கிய நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன:
5 முள்கள் இருந்ததால் முட்கரண்டியின் அகலம் கணிசமாக அதிகரித்து, சராசரி மனிதர்களின் உதடுகளைத் தாண்டி வாய்க்குள் வசதியாகச் செல்வது கடினமானது.
முட்கள் அதிகமாக இருந்ததால், நாம் கொடுக்கும் அழுத்தம் அனைத்து முட்களுக்கும் பரவலாகிவிட்டது. இதனால் காய்கறிகள் அல்லது இறைச்சி போன்ற கடினமான உணவுகளைக் குத்துவது சிரமமானது.
எனவே, 4 முட்கள் என்பது ஒரு கச்சிதமான சமநிலையைக் கொடுத்தது. இது உணவை அள்ளிச் சாப்பிடப் போதுமான மேற்பரப்பைக் கொடுத்தது; அதேசமயம் குத்திச் சாப்பிடத் தேவையான கூர்மையான அழுத்தத்தையும், வாய்க்குள் எளிதாகச் செல்லும் அளவையும் சரியாகக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் ஐரோப்பாவில் முட்கரண்டி பயன்பாட்டிற்கு வந்தபோது, இது சாத்தானின் ஆயுதம் (Devil’s pitchfork) போன்ற தோற்றம் கொண்டிருப்பதாகக் கூறி மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
“கடவுள் தந்த கைகள், விரல்கள் இருக்கும்போது எதற்கு இந்தக் செயற்கையான கருவி?” என்று கூறி, இதைப் பயன்படுத்துவது ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.
இத்தாலியின் நேபிள்ஸ் மன்னர் பெர்டினாண்ட் IV-ன் அரசவையில், ஸ்பகெட்டி (பாஸ்தா) உணவை எளிதாகச் சுழற்றிச் சாப்பிடுவதற்காகவே இந்த 4 முட்கள் கொண்ட முட்கரண்டி வடிவம் செம்மைப்படுத்தப்பட்டுப் பிரபலமானது.
இன்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் 4 முள் கொண்ட முட்கரண்டி என்பது ஏதோ ஒரு நாளில் தோன்றிய பொருளல்ல. பல நூற்றாண்டுகளின் உணவு உண்ணும் பழக்கம், பொறியியல் தேவை, மனித உடற்கூறு ஆகியவற்றின் அடிப்படையில் செதுக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த தினசரி பயன்பாட்டுக் கருவியாக இன்றும் நம்முடன் பயணிக்கிறது.