முதலை அருகே அமர்ந்து பூஜை செய்த பூசாரி.. மழைக்காக நடந்த வினோத வழிபாடு! – Kumudam

Spread the love

பீச்சுப்பள்ளி பகுதியில் உள்ள புஷ்கர காட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா ஆற்றில் இருந்து முதலை ஒன்று வெளியேறி கரைக்கு வந்துள்ளது. ஆற்றங்கரையில் முதலை இருப்பதை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பூசாரி அனில் சர்மா அதனை நெருங்கியுள்ளார்.

பின்னர் முதலையின் அருகிலேயே அமர்ந்த பூசாரி, அதற்கு முன்பாக பூக்களை வைத்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வழிபாடு செய்துள்ளார். மழை பெய்ய வேண்டி மந்திரங்கள் ஓதி அவர் பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஆபத்தான விலங்குகளை பார்த்தாலே மக்கள் விலகிச் செல்லும் நிலையில், பூசாரி முதலையின் அருகில் அமர்ந்து வழிபாடு செய்தது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதைவிட வியப்பை ஏற்படுத்தும் வகையில், பூசாரி அருகில் இருந்தபோதும் முதலை எவ்வித தாக்குதல் முயற்சியும் இல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இருந்த முதலையை பத்திரமாக பிடித்து, மீண்டும் கிருஷ்ணா ஆற்றுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யாததால், மழைக்காக இந்த வழிபாடு நடத்தப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை வேண்டி விலங்குகளை மையமாக வைத்து பல்வேறு பாரம்பரிய சடங்குகள் நடத்தப்படுவது சில பகுதிகளில் வழக்கமாக இருந்தாலும், முதலையின் அருகில் அமர்ந்து பூசாரி பூஜை செய்த சம்பவம் வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. முதலை அருகில் பூசாரி அமர்ந்திருக்கும் காட்சியை பார்த்த பலரும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *