முதல்வர் துறைக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்றத்திலேயே காவல்துறை பிடியிலிருந்து கைதி தப்பியோட்டம் ! – Kumudam

Spread the love

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

10 ஆண்டு சிறை… ரூ.1 லட்சம் அபராதம்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தேன்மலைப் பகுதியைச் சேர்ந்த ராஜா (25) என்பவர் மீது கடந்த 2024ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்ததாக திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நீதிபதி சுதாகர் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் ராஜா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை அறிவித்த சில நிமிடங்களில் தப்பிய ராஜா!

நீதிமன்றத்தில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அமர்ந்திருந்த ராஜா திடீரென அங்கிருந்து நழுவி தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் ராஜாவைத் தேடியபோது, அவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, காவல்துறையினரின் கண்காணிப்பையும் மீறி தப்பியிருப்பது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் வரை தீவிர தேடுதல்!

தப்பியோடிய ராஜாவைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய குற்றவாளியை விரைவில் பிடிக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை… மீண்டும் கைதி தப்பியதால் அரசுக்கு கேள்வி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் சூழலில், நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி தப்பியோடிய சம்பவம் அரசுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நீதிமன்றத்திலேயே கைதி தப்பியிருப்பது காவல்துறையின் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

காவல்துறையின் மெத்தனமா? முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக மெத்தனமா?

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்த குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியது பாதுகாப்பு குறைபாடா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? அல்லது காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெறும் குற்றச்சம்பவங்கள், கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள் ஆகியவை சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் முக்கிய பொறுப்பாக இருக்கும் நிலையில், நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளியே தப்பியோடியிருப்பது காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரும் சந்தேகத்தையும், அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பணி என்றால், அந்தத் தண்டனையை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பை வழங்குவது காவல்துறையின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலேயே இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டால், சட்டம் ஒழுங்கை எப்படி உறுதிப்படுத்துவது? காவல்துறையின் மெத்தனப்போக்கிற்கு யார் பொறுப்பு? முதலமைச்சர் விஜய் இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார்? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *