முநீஸ்வர சாஸ்திரிகள் சொல்லும்….அந்த ஏழு பொருட்கள் என்னென்ன? – Kumudam

Spread the love

பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி

கடன் என்றால் காசுபணத்தை மட்டுமே சொல்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். கடன் என்றால் கடமை. நம் ஒவ்வொருவருக்கும் கடமைகள் இருக்கின்றன. ஒரு தாய்க்கு உண்டான கடமை, தந்தையின் கடமை, குருநாதரின் கடமை, ராஜ்ஜியத்தை ஆளுகிற அரசனின் கடமை என்றெல்லாம் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆக, உங்களுக்கு, எனக்கு, நமக்கு என நம் எல்லோருக்குமே கடமைகள் இருக்கின்றன.

அந்தக் கடமைகளில் மிக மிக முக்கியமானது நன்றி. இந்த நன்றியுணர்வுடன் நாம் இந்தப் பிறவியைக் கடக்கவேண்டும். நன்றி மறவாமல் இருப்பதுதான் நல்லியல்பு என்று எல்லா நூல்களும் உபதேசிக்கின்றன. அந்தக் கடமைகளில் நம் குழந்தைகள் நல்லவிதமாக வளர்த்து, இந்தச் சமுதாயத்துக்கு வழங்கவேண்டும் என்பதும் நம்மை அப்படி வழிநடத்திய, ஆளாக்கிய நம் முன்னோர்களை வணங்கவேண்டும் என்பதும் மிக மிக அவசியம்!

‘நன்றி மறவாத நல்ல மனம் போதும். அதுவே என் வாழ்வில் மூலதனமாகும்’ என்கிற எம்ஜிஆர் கூட, நன்றி மறக்காத பண்பைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்னொரு பாடலில்’அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்று நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பெற்றோர், நம் பெற்றோருக்கு உபதேசித்து வழிகாட்டிய அவர்களின் பெற்றோர் முதலானவர்களை வழிபடவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

பித்ருக்களுக்கு செய்யும் சிராத்தத்தில், ஏழு பொருட்கள் அவசியம் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது சாஸ்திரம். சப்த ஸ்வரம், சப்த சாகரம் (கடல்) சப்த மாதர்கள், சப்த கன்னியர், சப்த ரிஷிகள் என ஏழு ஏழாக சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஏழு ஜென்மம் எடுத்தாலும் இவரே எனக்கு அப்பாவாக வரவேண்டும், அம்மாவாக வரவேண்டும், மனைவியாக வரவேண்டும்’ என்றெல்லாம் வேண்டிக்கொள்வதும் இதன் அடிப்படையில்தான்! ‘ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா’ என்று கவிஞர் வாலி, கணவன் மனைவி குறித்து எழுதியது இதை வலியுறுத்திதான்!

பிரம்மஸ்ரீ முநீஸ்வர சாஸ்திரிகளிடம் இவை குறித்துப் பேசினேன். அவர் அந்த மந்திரத்துடன், ஸ்லோகத்துடன் சொல்லச் சொல்ல, விதிர்த்து வியந்தேன்.

1. உச்சிஷ்டம் நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம்.
ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா:

உச்சிஷ்டம் என்றால் எச்சில் பொருள்.பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் புகட்டச் செய்து, பிறகு கன்றை விலக்கி விட்டு,மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது.இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது. எனவே, பசும்பால் என்பது கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும் என்று முநீஸ்வர சாஸ்திரிகள் விளக்கினார்.

2 . சிவ நிர்மால்யம்

தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவன் என்ன செய்தார்? தன் சிரசில் தாங்கிக் கொண்டார் . பின்னர், ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள் என்கிறது புராணம். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலம் என்பதால், அதனைக் கொண்டு சிவநிர்மால்யம் செய்யவேண்டும்.

சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷிக்கவேண்டும். தெளிக்கவேண்டும். அதையடுத்து, சிராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம். இதை சிவ நிர்மால்யம் என்கிறது சாஸ்திரம்.

3 . வமனம்

வமனம் என்றால் வாந்தி பண்ணி துப்பியது என்று அர்த்தம். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் பிரியமானது. எனவே, தேன் சேர்த்துக் கொள்வதால் பித்ருக்கள் மிகவும் சந்தோஷம் அடைகின்றனர் என்று ரிஷிகளும் முனிவர்களும் விவரித்திருக்கிறார்கள்.

4 . ஸ்வேத பர்ப்படம்

ஸ்வேதம் என்றால் வெண்மை நிறம். பர்ப்படம் என்றால் பட்டுதுணி. பித்ருக்களுக்கு வெண்மை நிறமுடைய பட்டுத்துணி மிகவும் உகந்தது. ஆகவே கர்த்தா எனபடுபவர், அதாவது யார் சிராத்த காரியத்தைச் செய்கிறாரோ அவர், சிராத்தத்தின்போது வெண்ணிறப் பட்டு வேஷ்டி கட்டிக் கொள்வதும் சிராத்தத்தின் போது நம் பித்ருக்களுக்குப் பதிலாக சாப்பிடுபவர்களுக்கு வெண்பட்டு அளித்து, அதை உடுத்திக் கொள்ளச் செய்வதும் பித்ருக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் நிறைவையும் கொடுக்கும்.

சிராத்தம் செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அள்ளித்தரும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். பட்டு உடுத்திக்கொண்டால், எந்தவொரு தீட்டும் தீயசக்தியும் எதிரிகள் தொல்லையும் நெருங்காது என்பதால்தான், அந்தக் கால அரசர்கள் தொடங்கி இந்தக் காலம் வரை, உரிய நாட்களில் பட்டாடை உடுத்திக்கொள்கிற வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

5 . தௌஹித்ர

தெளஹித்ர என்றால் பேரன் ,பேத்திகள் என்று அர்த்தம். யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய பெண்ணின் குழந்தைகளான பேரன் பேத்திகள்.இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள். மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் சொல்லுகிறார்கள்.அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் வைத்து, சாப்பிடச் செய்து, மறுநாள் பிரதமை அன்று அந்த மாட்டிலிருந்து கறந்தபாலை தயிராக்கி, அதை வெண்ணெயாக்கி, அதை நெய்யாகக் காய்ச்சினால் அதுவே தௌஹித்ர எனப்படும் பொருள்.அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் உகந்தது.

இன்னொரு விஷயம்… பசு ஒரு தலைமுறை, கன்று இன்னொரு தலைமுறை, பால் ஒரு தலைமுறை, தயிர் இன்னொரு தலைமுறை, வெண்ணெய் மற்றொரு தலைமுறை, நெய் அதையடுத்த தலைமுறை என்றும் இப்படியான அர்த்தங்கள் ஆயிரம்!

6. குதப

குதப என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம் என்று அர்த்தம். பகல் சுமார் 11.30க்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம்.கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்வதும் இந்த நேரத்திற்குள்ளாக சிராத்த, தர்ப்பண காரியங்களை முடித்துவிடுவதும் மிகுந்த பலன்களைத் தரும்.

7. திலா
திலா என்றால் கருப்பு நிற எள் என்று அர்த்தம். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும் என்கிறது சாஸ்திரம். வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.கருப்பு நிற எள், பித்ருக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எனவே, சிராத்தத்தில் எள் உபயோகிப்பது மிக மிக அவசியம். விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலும் சிராத்த, தர்ப்பண காரியங்கள் செய்யும் ஸ்தலமுமாக தில தர்ப்பணபுரி என்கிற ஊர் இன்றைக்கும் இருக்கிறது என்பது கொசுறுத்தகவல்.

பசும்பால், கங்கா ஜலம், தேன், வெண்பட்டு, நெய், குதப காலம், கருப்பு எள்… இந்த ஏழு பொருட்களையும் சிராத்தத்தில் சிறிதளவாவது சேர்க்கவேண்டும். நம் முன்னோர்களை இப்படியாக வணங்கவேண்டும். நம் முன்னோர்களை நாம் வணங்கினால்தான், நம் பிள்ளைகளும் அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளும் நோயில்லாமல், ஆரோக்கியமாக இருப்பார்கள். கல்வியிலும் குணத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்று முநீஸ்வர சாஸ்திரிகள் விவரித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *