மும்பையில் 40 ஆண்டு தனிமை வாழ்க்கை; இறந்த சென்னை மூதாட்டி உறவினர்களை ஆன்லைனில் தேடும் நெட்டிசன்கள்!

Spread the love

எத்தனையோ உறவினர்கள் இருந்தாலும், சிலர் வயதான காலத்தில் தனிமையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் இறந்தாலும்கூட ரத்த சொந்தங்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அது போன்ற ஒரு நிலைதான் மும்பையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற அப்பெண் கடந்த 40 ஆண்டுகளாக மும்பையில் தனிமையில்தான் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் தங்களது தாயாருக்கு பணம் அனுப்புவதோடு நின்று கொண்டனர்.

ஒருநாளும் நேரில் வந்து பார்த்துக்கொண்டது கிடையாது. லலிதாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் பார்த்துக்கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு லலிதா வயது மூப்பு காரணமாக காலமாகிவிட்டார். அவரது இறுதிச்சடங்குகளை அவர் வசித்து வந்த கட்டடத்தில் வசிக்கும் நபர்கள்தான் செய்தனர். லலிதாவின் மறைவு குறித்து கேள்விப்பட்டு அவரது உறவினர்களோ அல்லது மகள்களோ வரவில்லை. லலிதா இறந்தது அவர்களுக்குத் தெரியுமா என்றுகூட தெரியவில்லை.

இதனால் லலிதா வசித்த கட்டடத்தில் வசிப்பவர்கள் லலிதாவின் உறவினர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். லலிதா வசித்த கட்டடத்தில் வசிக்கும் உஷா லக்ஷ்மிநாராயண் மற்றும் பவன் ஷெட்டி ஆகியோரின் தொடர்பு விவரங்களுடன் அவரது மகள்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களைக் கண்டறிய சமூக வலைதளங்களில் லலிதா கிருஷ்ணமூர்த்தியின் புகைப்படத்துடன் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதனைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், சோகம் என்பது மரணம்கூட அல்ல. ஆனால் அவரது மரணம் பற்றி யாருக்கும் தெரியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்த போன் நம்பருக்கு அழைத்து பேசிய ஒரு சமூக ஊடக பயனர் தனது பதிவில், லலிதா பல தசாப்தங்களாக எப்படி தனியாக வாழ்ந்தார் என்பதையும், உஷாவும், பவன் ஷெட்டியும் அவருக்கு உதவியாக இருந்ததையும் தெரிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *