மும்பை கனமழை: “நாளை போய்விடலாம்னு சொன்னேன்; ஆனா…”- கட்டிடம் இடிந்ததில் குடும்பத்தை இழந்த நபர் | Mumbai Heavy Rains: Man who lost his family in building collapse.

Spread the love

மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக மான்கூர்டு பகுதியில் மன்குர்த் ஜனதா நகரில் இருந்த சட்டவிரோத நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 38 வயதான அக்தர் ஜஹான் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் (3 முதல் 14 வயது வரை) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களுடன் விளையாட வந்த பக்கத்து வீட்டு 6 வயது சிறுமியும் இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் கணவரான மொய்னுதீன் வாஜித் அலி ஷா மட்டுமே இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

மொய்னுதீன்

மொய்னுதீன்

தொடர் மழையினால் பக்கத்து கட்டிடம் பாதுகாப்பற்றதாக மாறி, விரிசல் விழுவதையும் சாய்வதையும் கண்ட அக்தர் ஜஹான் மற்றும் அவரது கணவர், அடுத்த நாள் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு மாற திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் மாறுவதற்கு முன்பாகவே இந்தத் துயரம் நிகழ்ந்துவிட்டது.

இடிந்து விழுந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அக்கம் பக்கத்தினர் தங்களின் வீடுகளை அவசரமாகக் காலி செய்யத் தொடங்கியிருந்தனர். அக்தர் ஜஹான் குடும்பம் சட்டவிரோத கட்டிடத்திற்கு அருகில் தகர கூரை வீடாக இருந்தது.

அக்தர் ஜஹானும் தனது குடும்பத்துடன் வெளியேறுவதற்காக பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்த போதே இந்தத் துயரம் நிகழ்ந்தது என்று அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாக வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பிய கணவர் மொய்னுதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாம் நாளை வேறு இடத்திற்கு மாறிவிடலாம் என்று எனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தேன். ஆனால், நாங்கள் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பாகவே, பக்கத்து கட்டிடம் எங்கள் வீட்டின் மீது இடிந்து விழுந்து, உள்ளே இருந்தவர்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்துவிட்டது” என்று கண்ணீருடன் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *