மும்பை நிலச்சரிவு: பாறை உருண்டு வீடுகளில் விழுந்ததால் 5 பேர் பலி; நள்ளிரவில் என்ன நடந்தது?

Spread the love

மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் கெளஷியா சால் பகுதியில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த 3 வீட்டில் விழுந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது வீடு இடிந்து விழுந்து உள்ளே சிக்கிக்கொண்டனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்து விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சிக்கிக்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தை மாநகராட்சி மேயர் ரிது தாவ்டேயும், மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.

இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார். இடிபாடுகளில் இன்னும் 3 முதல் 4 பேர் சிக்கி இருக்கவேண்டும் என்று மாநகராட்சி துணை கமிஷனர் அவினாஷ் தெரிவித்தார்.

இடிபாடுகள்
இடிபாடுகள்

இடிபாடுகளுக்கு அடியில் யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்களைப் பயன்படுத்தி, தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து பேசிய மும்பை போலீஸ் துணை கமிஷனர் கணேஷ் ஷிண்டே, “மழையின் காரணமாக, காட்கோபர் அசோக்நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 உடல்கள் மீட்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து சரியான எண்ணிக்கையை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், இடிபாடுகளுக்குள் இன்னும் 3 முதல் 4 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்றார்.

இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *