It’s One Life – வாழ்க்கை வாழ்வதற்கே
“இன்னிக்கு மதியத்துக்கு என்ன சமைக்கலாம்? மனைவி கேட்டாள்.
“நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சதா ஏதாவது…” என்று புன்னகைத்தார் கணவர்.
பல வருடங்களுக்குப் பிறகு, அந்த வீட்டில் மதிய உணவு வேறு யாருக்காகவும், வேறு எதற்காகவும் திட்டமிடப்படவில்லை. குழந்தைகளின் விருப்பத்திற்காகவோ, அலுவலக நேரத்திற்காகவோ இல்லாமல், முழுக்க முழுக்க அவர்களுக்காக மட்டுமே!
மகள் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருந்தாள். மகன் வேறு நகரத்தில் தனது வேலையிலும் வாழ்க்கையிலும் பிஸியாக இருந்தான்.
வீடு அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதி இப்போது வெறுமையாகத் தெரியவில்லை.
காலை நடைப்பயிற்சிக்குப் பிறகு, கணவர் பல வருடங்களாகத் திறக்காமல் வைத்திருந்த பழைய வயலினை எடுத்து இசைத்தார். மனைவி, திருமணத்துக்கு முன் வரைந்து பழகிய ஓவியத்தை மீண்டும் வரையும் ஆர்வத்தில் வண்ணங்களைக் குழைத்தார்.
மாலை நேரங்களில் இருவரும் சேர்ந்து தோட்டம் அமைத்தனர். வார இறுதிகளில் அருகிலுள்ள ஊர்களுக்குச் சிறிய பயணங்கள் சென்றனர்.
ஒரு நாள், வீடியோ காலில் மகள் கேட்டாள்… “அம்மா, அப்பா… எங்களை நீங்க மிஸ் பண்ணவே இல்லையா?”
அம்மா சிரித்தாள். “மிஸ் பண்றோம்தான்! ஆனா, இப்போ எங்களையும் நாங்க மிஸ் பண்ணாம பார்த்துக்கறோம்.”
குழந்தைகளுக்காக ஒதுக்கியிருந்த வாழ்க்கைக்குப் பிறகு, இப்போது அவர்கள் தங்களுக்காக ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
சில கனவுகள் காத்திருக்கலாம். ஆனால், அவற்றை வாழத் தொடங்குவதற்கு ஒருபோதும் காத்திருக்க வேண்டியதில்லை.
– மாலா சங்கர்.

