Tamilnadu
oi-Vishnupriya R
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மூலனூரில் உள்ள வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு சென்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் ஏற்கெனவே பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடையவுள்ள நிலையில் விஜய், சத்தியபாமாவை ஆதரித்து ரோடு ஷோ நடத்தி வருகிறார்.

அந்த வகையில் மாருதி நகர் முதல் மூலனூர் வரை 30 கி.மீட்டர் தூரம் ரோடு ஷோவை தொடங்கினார். அப்போது மாட்டு வண்டி ஓட்டிபார்த்தார். அது போல் முருங்கை மரங்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு சென்று தொரட்டி மூலம் முருங்கைக்காய்களை பறித்தார். வழிநெடுகிலும் மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
செல்லும் வழியில் மூலனூரில் வஞ்சியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வஞ்சியம்மனை வழிபட்டு கோயிலுக்குள் வலம் வந்த விஜய், அங்கிருந்த தங்கத்தேரையும் வழிபட்டார்.

பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இந்த கோயில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வரலாற்றின்படி வஞ்சியம்மன், பண்டைய சேர மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக சொல்லப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் அதிகம் வாழும் கொங்கு வேளாள கவுண்டர்களின் இரு பிரிவினருக்கான குலதெய்வமாக கருதப்படுகிறது. இந்த கோயில் 3 நிலைகளை கொண்டுள்ளது. விநாயகர், முருகன், செல்லாண்டி அம்மன், கன்னிமார் சுவாமி, கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் துணைச் சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இந்த கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மாசி மாதத்தில் நடைபெறும் தேரோட்டத் திருவிழா ஆகும். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
இந்த கோயில் தாராபுரம்- கரூர் மாநில நெடுஞ்சாலையில் மூலனூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகே அமைந்துள்ளது. மதுரை சென்ற போது மீனாட்சி அம்மனை வழிபட்டார். அது போல் மதுராந்தகத்தில் ரோடு ஷோவின் போது மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்வார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. எனினும் சோத்துப்பாக்கம் அருகே அவருக்கு ஆதிபராசக்தியின் உருவம் கொண்ட சிலையும் குங்கும பிரசாதமும் வழங்கப்பட்டது.