Tamilnadu
oi-Vigneshkumar
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலைப் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எல் நினோ காரணமாக உலகெங்கும் பருவநிலை மாற்றம் நடந்துள்ளது. மழை பெய்ய வேண்டிய நேரத்தில் மழை இல்லை. பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட செப்டம்பர் மாதம் வந்துவிட்ட நிலையில், வெப்பம் இன்னும் குறையவில்லை. பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் தொடர்ச்சியாக 100 டிகிரியை தாண்டியே பதிவாகி வருகிறது.

திடீர் கனமழை
அதேநேரம் பருவநிலை மாற்றம் காரணமாக திடீரென மழை கொட்டி தீர்க்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் இதுபோல மழை கொட்டி தீர்ப்பதால் மிக மோசமான பாதிப்பும் ஏற்படுகிறது. இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை பகுதியிலும் இன்று கனமழை கொட்டி தீர்த்தது. மேகவெடிப்பு காரணமாக இந்த கனமழை பெய்துள்ளது. இதனால் ஓடைகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கயிறு கட்டி மீட்பு
பச்சைமலை பகுதியில் இன்று பெய்த கனமழையால் அங்குள்ள ஓடைகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிலர் சிக்கி கொண்ட நிலையில், அவர்களை மீட்க அப்பகுதி மக்கள் உடனடியாக களமிறங்கினர். அப்போது கயிறுகளை பயன்படுத்தி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் உதவியுடன் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
கொட்டி தீர்க்கும் மழை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் முதல் கனமழை வெளுத்து வாங்கியது. நெல்லை, தென்காசி, மதுரை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பிற்பகலில் திடீரென கனமழை பெய்தது. நெல்லை திசையன்விளை பகுதியில் தொடங்கிய மழை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாபநாசம், இடைகால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது.
கடும் வெயிலால் தகித்துக் கொண்டிருந்த நெல்லை, தென்காசி மாவட்டங்கள் இன்று பெய்த மழையால் குளிர்ந்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், மழை பெய்தது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நீண்ட நேரமாக தண்ணீர் வடியாமல் இருந்ததால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.