மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலகமான நபன்னாவில் நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேற்கு வங்கம் என்ற மாநிலப் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து முதல்வர் சுவேந்து அதிகாரி, அரசு மற்றும் நிர்வாக ஆவணங்களில் “வெஸ்ட் பெங்கால்’ (West Bengal) என்ற நீண்டகாலப் பெயர் மாற்றப்பட்டு, ஆங்கிலத்திலும் ‘பஸ்சிம் பங்கா’ (Paschim Banga) என்றே அழைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

டிசம்பர் 4 முதல் 14-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில், டிசம்பர் 9-ம் தேதி இதற்கான தீர்மானத்தை பாஜக தலைமையிலான அரசு தாக்கல் செய்யவுள்ளது. சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். முன்னதாக, இடதுசாரி அரசும், அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசும் மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின.