
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக தனி பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியை பிடித்தது. இதை தொடர்ந்து, பா.ஜ., தலைமையில் அங்கு ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்தன. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியை சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
பா.ஜ., சார்பில் மேற்கு வங்கத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில் இன்று (மே 09) புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கட்டாவில் உள்ள பிரிகேட் பரேட் கிரவுன்ஸில் நடந்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அம்மாநில கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் சுவேந்து அதிகாரி முதல்வராகவும் மற்றும் அவருடைய தலைமையிலான அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். மேலும், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.