சுருளி சிறுவனாக இருக்கும்போது, பள்ளிக்குச் செல்லாமல் மூன்று மாதங்களாக ஏய்த்துக்கொண்டு திரிகிறான். அதை கண்டுபிடிக்கும் ஆசிரியர், அதை அவனது அப்பாவிடம் சொல்ல வந்தால், ஆசிரியரின் காதைத் திருகி, ‘ஒரு சின்னப்பய மூணு மாசமா ஸ்கூலுக்கு வராம இருக்கிறதை கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு தாமதமா?’ என்று ஆசிரியரைத் தண்டிக்கிறார் அந்த அப்பா. மாங்காய் தோப்புக்காரன் சுருளியைப் பற்றி குற்றம் சொல்ல வரும் போதும், அவரிடம் தன் உடமைகளை இழக்கிறான். பொறுப்பற்ற ஆனால் வேடிக்கையான ஒரு பாத்திரம்.
எஸ்.பி பாஸ்கரின் மனைவி சுதா பாத்திரமும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. ஒரு சாதாரண விசாரணைக் குற்றவாளி தப்பினால் கூட அதற்குப் பொறுப்பேற்கவேண்டிய ஜெயில் சூப்பரிண்டெண்ட் மற்றும் சிறைக் காவலர்கள், அதனால் என்னென்ன பாதிப்புகளையெல்லாம் சந்திக்கவேண்டியது வரும் என்ற பகுதிகள் நமக்குப் புதிதாக இருந்தன. கிடைக்கும் ஒரு நாள் விடுமுறைக்குள் தகுந்த ஆவணங்கள் இல்லாமலேயே அவனை மீண்டும் பிடித்துவர கிளம்புகிறார்கள். ஒரு போலீஸ்காரர், அந்த பதவிக்குரிய எந்த உரிமையையும் இந்தச் சூழலில் பயன்படுத்தமுடியாது. நமக்கே இந்த பரிதாபமான நிலை புரிகிறது. ஆனால், தலை தீபாவளிக்காக கோபத்துடன் காத்திருக்கும் அந்த மனைவிக்கு அது புரியவில்லை.
அவளோ அப்பா, அம்மா, நான்கைந்து அண்ணன்மார்கள், உறவினர்கள் என பெருங்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளது சாதாரண தீபாவளிகளே கொண்டாட்டமாக இருந்திருக்கலாம். தலை தீபாவளியைப் பற்றிப் பெரிதான கொண்டாட்டக் கனவுகள் இருந்திருக்கலாம் அவளுக்கு. கணவர் வேலைக்குப் போனதும், இந்தக் குவார்ட்டர்ஸ் தனிமை வாழ்க்கையில் எந்தளவுக்கு மனம் பாதிக்கப்பட்டாளோ, பாஸ்கரின் சூழலைப் புரிந்துகொள்ளாத ஒரு மனைவியாக அவள் உட்பட அனைவருக்குமே பெரும் தீங்கை ஏற்படுத்திவிடுகிறாள்.
ஒரு கதையின் முடிவு என்பது கதைக்குள்ளிருந்து, அதன் இயல்பிலிருந்து, அதன் தேவையிலிருந்து, அது பேசும் தத்துவத்திலிருந்து உருவாக வேண்டும். இந்தப் படத்தின் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியூட்டினாலும், அது தற்செயல் நிகழ்விலிருந்து உருவாகிறது. அதை சிறப்பானதொரு முடிவு என்று சொல்லமுடியாது. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஓர் அழகான புதிய பயண அனுபவத்தை மைனா நமக்குக் கொடுத்தது.
பயணம் மனிதர்களை அவர்களுக்குப் பழக்கமான உலகத்திலிருந்து வெளியே கொண்டுபோகிறது. அந்தப் புதிய சூழலில், புதிய மனிதர்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பற்றியும், தங்களைப் பற்றியும் புதிதாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பயணம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒருவரை வெறும் அடையாளங்களால் —நண்பன், எதிரி, போலீஸ், குற்றவாளி என்று— பார்த்துக்கொண்டிருப்பதைவிட, அவர்களோடு பயணிக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் குணநலன்கள் தெரியத் தொடங்குகின்றன.
மனிதர்களைப் பற்றிய நம்முடைய பார்வையையும் மாறுகிறது. தொடக்கத்தில், சுருளி-மைனாவின் மீது கடுமையான கோபமும், வன்மமும் கொண்டிருக்கும் பாஸ்கர்-ராமையா இறுதியில் அவர்களின் களங்கமற்றத் தன்மையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களைத் தம் நட்பாகவும், உறவாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
பயணம் அதைத்தான் செய்யும், மைனா அதைத்தான் செய்தது.!