`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்’ – புன்னகையால் வறுமையை வெல்லும் சம்பூரணம் பாட்டி

Spread the love

“பூண்டு வாங்கலையோ பூண்டு…” – சென்னை, புத்தி பேகம் தெருவின் முனையில், கிழிந்த கறுப்பு நிற குடைக்கு அடியில் வறண்ட கோடை வெயிலில் அமர்ந்து பூண்டு விற்கும் அந்த 75 வயது பாட்டியின் குரலில் வறுமையின் சுவடு தெரியவில்லை; மாறாக… உழைப்பின் கம்பீரமும், முகத்தில் அலாதியான புன்னகையும் மட்டுமே ததும்புகிறது. அவர்தான் சம்பூரணம் பாட்டி.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு உழைப்பால் ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் இந்த “தெம்பு பாட்டி’யின் பின்னணியில், நெஞ்சை உலுக்கும் ஒரு பெரும் போராட்டக் கதையே ஒளிந்திருக்கிறது.

50 ஆண்டுகால சென்னை வாழ்க்கை.

சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆற்காடு என்றாலும், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. திருமணமான 18 ஆண்டுகளிலேயே, கணவர் தனபால் புற்றுநோயால் (Cancer) பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.

அன்றிலிருந்து சம்பூரணத்தின் தனி வழிப் பயணம் தொடங்கியது. யாரிடமும் கையேந்தக் கூடாது என்ற வைராக்கியத்துடன், ஆரம்பத்தில் வீதி வீதியாகச் சென்று மோர் விற்றார். அந்த உழைப்பைக் கொண்டே தன் மகன் வெங்கடேஷ்ராஜ் மற்றும் மகள் செல்வி ஆகிய இருவரையும் வளர்த்து, ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தார். ஒரு பெண்ணாக நின்று அவர் செய்த பெரும் சாதனை இது.

உறவுகள் கைவிட்ட நிலையிலும் தளராத உழைப்பு

பிள்ளைகளைக் கரை சேர்த்த பிறகும், இந்தப் பாட்டிக்கு ஓய்வு கிடைக்கவில்லை. மகன், மருமகள் மற்றும் பேரன் என சொந்த பந்தங்கள் யாரும் இன்று இவரைக் கண்டுகொள்வதில்லை; கவனிப்பதும் இல்லை. மகள் செல்விக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவரது குடும்பச் சூழ்நிலையும் கஷ்டத்தில் இருப்பதால், யாரிடமும் உதவி கேட்க சம்பூரணம் பாட்டியின் மனம் இடம் தரவில்லை.

தன் சொந்தக் காலில் நின்று உழைக்க வேண்டும் என்ற உறுதியோடு, தினமும் பள்ளிக்கரணையிலிருந்து பேருந்து மூலம் புத்தி பேகம் தெருவுக்கு வந்து இந்த பூண்டு வியாபாரத்தைத் தொடங்கிவிடுகிறார்.

மகளிர் இலவசப் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், தனக்குக் கிடைக்கும் விதவை உதவித்தொகை பணத்தைக் கொண்டு, முறையாக ‘பஸ் பாஸ்’ (Bus Pass) பெற்று, அதில் தினமும் பயணம் செய்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *