தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைப்பட விமர்சகர் என முகமாக ஜொலிப்பவர் சித்ரா லட்சுமணன். `பிரம்மச்சாரி” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கு முன்னர் நடிப்புக்கு சின்னதொரு இடைவெளி விட்டிருந்தவர், இப்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சமீபத்திய ‘மகுடம்’ படத்தில் டாக்டர் ஆக நடித்தவர், இப்போது வரவிருக்கும் இரண்டு படங்களில் டாக்டர் ஆக நடித்துள்ளார்.
இது குறித்து சித்ரா லட்சுமணனிடம் பேசினால், தனது அக்மார்க் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார்.

“ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ‘கருப்பு’ படத்துக்கு முன் நடிப்புக்கு சின்னதா ஒரு இடைவெளி ஆகிடுச்சு. ஏன்னா, யூடியூப்புக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு. இப்போ அததுக்கான ஆட்கள் நியமிச்சுட்டதால நேரம் அமைஞ்சிடுச்சு. மத்தபடி வேறந்த காரணமுமில்ல. ‘கருப்பு’க்கு கிடைச்ச வரவேற்புக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டர்கள் தேடி வருது. இப்போ ‘அப்பாகுட்டி’, ‘வாண வேடிக்கை’, ‘ரீ மேட்ச்’, ‘மேரி கோல்ட்’னு பல படங்கள் கைவசம் இருக்கு. விஷாலோட ‘மகுடம்’ படத்துல டாக்டரா நடிச்சேன். அதன் பிறகு இப்போ நடிக்கிற ‘அப்பா குட்டி’, ‘ரீ மேட்ச்’ ரெண்டிலும் டாக்டர் தான்.

என்னோட கரியர்ல ஒரே சமயத்துல இப்படி டாக்டரா நடிச்சதில்லை. இப்படி வாய்ப்பு மத்த நடிகர்களுக்கு அமைஞ்சிருக்கலாம். ஆனா, ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமான டாக்டர்ங்கறதால சுவாரஸ்யமா இருக்கு. ‘மகுடம்’ல டாக்டரே கொஞ்சம் கோளாறானவரா இருப்பார். அப்படியொரு ரோல். இப்போ விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’யில நேர்மையான ஒரு டாக்டர். படத்தின் திருப்புமுனையாகவும் இருக்கும். அடுத்து வரும் `ரீ மேட்ச்’ல காமெடி கலந்த டாக்டர். இது தவிர, சண்முகப்பாண்டியோட ‘வாண வேடிக்கை’யிலும் பிரபு, சுகன்யா நடிக்கும் ‘மேரி கோல்ட்’லேயும் முக்கியமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். அடுத்தடுத்து நல்ல ரோல்கள் அமையறதால திரைப்பயணமும் இனிமையா இருக்கு!” எனக் கூறி மகிழ்கிறார் சித்ரா லட்சுமணன்.