அப்போது பேசிய அஸ்வத் மாரிமுத்து, “இங்க நடக்கிறது ஒரு ஹிஸ்டரி. தலைவர் படத்தை இயக்க வேண்டும் என்பது இயக்குநராக இருக்கும் அனைவரின் ஆசை. கமல் சார் தயாரிப்பில், ரஜினி சார் நடிக்கும் படத்தை என்னுடைய குழு இயக்குவது ஒரு ஹிஸ்டரிதான்.
இதை நான் டைரக்ட் செய்கிற படமாக மட்டும் பார்க்கல. இந்தப் படம் நடப்பதற்குக் காரணமாக இருந்த மகேந்திரன் சாருக்கு நன்றி. ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு, சிம்பு சாருக்கும் நன்றி. என்னை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
படத்துல மொத்தம் 8 பாட்டு இருக்கு. அனிருத் இசையில் அத்தனை இடங்களையும் கவர் செய்திடுவார். சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும் படத்திற்கு அமைத்திருக்கிறோம்.

கமல் சாரைப் பார்க்கும்போது, எனக்கு எப்போதும் பயமாக இருக்கு. கமல் சாரைச் சந்திக்கும்போது, ‘நான் ரஜினி சார் ஃபேன். ரஜினி படம் பண்ணுங்க’னு சொன்னார். பிறகு ரஜினி சார், ‘அஸ்வத், நம்ம கமல்ஹாசனுக்குப் படம் பண்றோம். நல்ல படம் பண்ணனும்’ என்றார். ரஜினி சாருக்கு இரவு 11 மணிக்குக்கூட கால் பண்ணி பேசுவேன். அப்போ கதையை டிஸ்கஸ் பண்ணுவோம்.
அதுக்கான இடத்தை ரஜினி சார் கொடுத்தார்” என்றவர், “இது 5 ரூபாய் டாக்டரின் கதைனு பேசிக்கிறாங்க. ஆனா, அது கிடையாது. இது தர்மன் என்கிற கேரக்டரை வைத்து நகர்கிற படம். நாளை முதல் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்” என்றார்.