புனேயில் லோஹாகட் கோட்டையில் கேதன் அகர்வால் என்பவர் மலையில் உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கேதனின் வருங்கால மனைவி ஷியா மற்றும் ஷியாவின் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் இக்கொலைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக முயற்சி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 26 வயதான தொழிலதிபர் கேதன் அகர்வாலின் வருங்கால மனைவி ஷியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் சௌத்ரி ஆகியோர், அவரைக் கொலை செய்ய பலமுறை முயன்று, இறுதியில் ஜூன் 18 அன்று லோஹாகட் கோட்டையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் அவரைத் தள்ளிவிட்டுக் கொன்றதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 18ம் தேதிக்கு முன்பு அதே லோஹாகட் கோட்டையில் வைத்து கேதனை கொலை செய்ய மூன்று முறை முயற்சி செய்துள்ளனர். ஆனால் மூன்று முறையும் திட்டமிட்டபடி விஷயங்கள் அமையாததால் அந்த முயற்சிகளைக் கைவிட்டு, சரியான சூழலையும் இடத்தையும் சேதனும், ஷியாவும் தொடர்ந்து தேடி இறுதியில் ஏற்கனவே மூன்று முறை முயற்சி செய்த இடத்திலே தங்களது காரியத்தை முடித்தனர்.
முதல் முறை மே 31ம் தேதி கேதனை ஷியா லோஹாகட் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டார். ஆனால் இதில் அவர் புதரை பிடித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதனால் நிலைமையை சமாளிக்க ஷியா பாம்பு, பாம்பு என்றும், பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டதாகவும் கூறி தப்பித்துக்கொண்டார். இம்மாதம் 4ம் தேதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் இம்முறை கேதனை அவரது தாயார் அனுப்பவில்லை.
இதனால் இதில் தப்பித்துக்கொண்டார். கடந்த 14ம் தேதி மீண்டும் கேதனை லோஹாகட் கோட்டைக்கு ஷியா அழைத்துசென்றார். ஆனால் அன்று கோட்டையை பார்க்க அதிக கூட்டம் வந்திருந்தது. எனவே அன்றைய தினம் ஷியாவால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நான்காவது முயற்சியாக ஷியா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சாக்குப்போக்கின் கீழ், மீண்டும் லோஹாகட் கோட்டைக்கு செல்லலாம் என்று கேதனை கட்டாயப்படுத்தினார்.