‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘டோரதி’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிஷிகாந்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் சார் மாதிரி நான் இருக்கிறதாக என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இதைக் கேட்பதற்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும், நான் சுயமாகச் செய்த ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.

எல்லோருக்குமே ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத முன்னுதாரணம். ‘மனிதன்’ திரைப்படம்தான் நான் பார்த்த முதல் ரஜினிகாந்த் படம். ‘படையப்பா’ மற்றும் இன்னும் சில படங்களின் கேசட்டுகள் என்னிடம் இருந்தன, அவற்றை அடிக்கடி பார்ப்பேன். எனக்கு ‘பாபா’ திரைப்படம் மிகவும் பிடிக்கும், தியேட்டரில் நான் பார்த்த அவருடைய முதல் திரைப்படம் ‘சிவாஜி'” என்று பேசியிருக்கிறார்.