இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் குறித்து ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தியும் சர்ச்சையும் எழுந்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் நிதேஷ் திவாரி தற்போது விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து ‘தி ஃபெடரல்’ (The Federal) ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “சீதையை ஒரு போராளியாகச் சித்தரித்தது சமஸ்கிருதத்தின் ‘அத்புத ராமாயணம்’ மற்றும் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒடியா மொழியின் ‘பிலங்கா ராமாயணம்’ ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தப் படைப்புகளில் சீதை வெறும் பொறுமையின் வடிவமாக மட்டுமல்லாமல், ஒரு துடிப்பான போராளியாகவும், பிரபஞ்ச சக்தியின் வடிவமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதிப்புகளில், ராமர் போர்க்களத்தில் நிலைகுலையும் போது, சீதை ஆக்ரோஷமான மகாகாளி அவதாரம் எடுத்து, ஆயிரம் தலைகளைக் கொண்ட ‘சஹஸ்ர ராவணனை’ வதம் செய்கிறார்.
போராளி சீதை என்பது ஏதோ நவீன பெண்ணியக் கருத்தாக்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட இதிகாச மரபுகளிலேயே இத்தகைய சித்தரிப்புகள் ஏற்கனவே உள்ளன” என்றார். ஒருபுறம் இத்தகைய விவாதங்களும் சர்ச்சைகளும் நீடித்தாலும், திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான ஒன்பது நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 612.70 கோடி நிகர வசூலையும், உலகளவில் ரூ. 1,111 கோடி மொத்த வசூலையும் குவித்து வெற்றி நடை போடுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…