திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் குடும்பத் திருமணம் என்றாலே அரசியல் வட்டாரத்தில் கவனம் திரும்புவது இயல்புதான். அந்த வகையில், அவரது பேத்தி செந்தாமரை – தீபக் ரவி திருமணம் தற்போது பல்வேறு காரணங்களால் பேசுபொருளாகியுள்ளது.
நிச்சயதார்த்தத்தில் வழங்கப்பட்ட விலை உயர்ந்த நகைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான அழைப்பிதழ், யுவன் சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி, மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையிலான விருந்து எனத் திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கிடையே, திருமணம் நடைபெற்ற முறையும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் – சங்கீதா தம்பதியரின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பிரம்மாண்ட நிச்சயதார்த்தம்… ரூ.100 கோடி நகைகளா?
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் காட்பாடியில் இவர்களது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் மணமக்களுக்கு வழங்கப்பட்ட வைர நெக்லஸ், ஒட்டியாணம், வளையல்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. இந்த நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக சீதனங்கள் வழங்கியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.25 ஆயிரம் மதிப்பில் அழைப்பிதழ்!
திருமணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழும் தனி கவனம் பெற்றது. மயில் தோகை விரிப்பது போன்ற வடிவமைப்பில், தங்க விநாயகர் சிலை மற்றும் விலை உயர்ந்த இனிப்பு வகைகளுடன் பிரத்யேக டப்பா வடிவில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது. ஒரு அழைப்பிதழின் மதிப்பு மட்டும் ரூ.25 ஆயிரம் எனக் கூறப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரையும் நேரில் சந்தித்து மணமக்கள் குடும்பத்தினர் அழைப்பு விடுத்தனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி!
திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 31-ம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கன்னட நடிகர் சிவராஜ்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகைகள் குஷ்பு, மீனா, ரோஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, நடிகர் வடிவேலு மணமக்களை வாழ்த்தியதுடன் உற்சாகமாக நடனமாடியதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
அரசியல் கட்சிகளைக் கடந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். அப்போது திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனும், ஜி.கே. மணியும் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்ட நிகழ்வும் பேசப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையில் தடபுடல் விருந்து!
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 1-ம் தேதி செந்தாமரை – தீபக் ரவி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமக்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் மற்றும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. அதேபோல், விருந்தினர்களுக்காகவும் தடபுடலான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையிலான குழுவினர் திருமண விருந்தைத் தயாரித்துப் பரிமாறினர். விருந்தினர்களிடம் உணவு குறித்துக் கேட்டறிந்து, அன்புடன் உபசரித்த மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
வைதீக முறைத் திருமணம்… எழுந்த புதிய விவாதம்!
இவ்வளவு பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது மற்றொரு விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரியாரின் கொள்கைகள், பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திமுக தலைவர்களின் குடும்பங்களில் பொதுவாக சுயமரியாதைத் திருமணங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
ஆனால், செந்தாமரை – தீபக் ரவி திருமணம் ஐயர் முன்னிலையில், சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு வைதீக முறைப்படி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஏற்கெனவே இந்தத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலித்தது குறித்து திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், திருமணத்தின் பிரம்மாண்டத்தைத் தாண்டி, அதன் சடங்கு முறையும் திமுகவின் கொள்கை நிலைப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது.

