தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகொம்மா சுசரிதா. இவர் சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் தங்கம், வைரம், ரொக்க பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனைகளின்போது, சித்திபேட்டில் 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஐதராபாத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 2 மனைகள், ஒரு வோல்ஸ்வேகன் மற்றும் ஒரு ஹூண்டாய் கிரெட்டா கார், ரூ. 1.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 12 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 38 லட்சம் வங்கி வைப்புத்தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5.05 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவற்றின் சந்தை மதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுசரிதா தனது வருமானத்திற்கு அதிகமாக லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஐதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் சுசரிதா மீதான பிடி மேலும் இறுகி இருக்கிறது. தற்போது அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.