ரூ.6,000 சம்பளம் வாங்கும் அரசு பொறியாளரிடம் சிக்கிய ரூ.2 கோடி, சொத்து ஆவணங்கள்… ஒடிசா அதிர்ச்சி!

Spread the love

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள பாலிகுடா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மேம்பாட்டு ஏஜென்சியான ITDAயில் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் பைகுந்தநாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பைகுந்தநாத் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் பாலிகுடா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், பல ஆடம்பரச் சொத்துகள், அதிக மதிப்புள்ள நிலங்கள் மற்றும் பிற சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சந்திரசேகர்பூர், சைலஸ்ரீ விஹார், கனன் விஹார், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மசாலா, பரிபாடா, பாலிகுடாவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலக அறை ஆகியவற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

விசாரணையில் பைகுந்தநாத் குடும்பத்திற்கு சொந்தமாக 5 அடுக்கு மாடி கட்டடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புபனேஷ்வரில் 7 இடங்களில் நிலம் வாங்கிப்போட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. மொத்தம் 13 இடங்களில் நிலம் வாங்கிக்கிப்போட்டு இருப்பது ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரிய வந்துள்ளது. அதோடு அவரது வீட்டில் இருந்து ரூ.2.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதித்து பார்த்தபோது உள்ளே ரூ.2 கோடி அளவுக்கு பணம் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள், வங்கி வைப்புத்தொகை, தபால் சேமிப்பு, முதலீடுகள் மற்றும் பிற நிதி சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. பைகுந்த நாத் 1999 இல் ஜூனியர் பொறியாளராக அரசாங்கப் பணியில் சேர்ந்தார், மாதச் சம்பளம் சுமார் 6,000. பல ஆண்டுகளாக, அவர் பல்வேறு பழங்குடியினர் மேம்பாட்டு முகவர் மற்றும் பொறியியல் பணிகளில் பணியாற்றினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உதவி நிர்வாகப் பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். மதிப்பீட்டு பணி முடிந்ததும் சொத்துகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *