கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில் இயங்கி வருகிறது கர்நாடக அரசின் “நம்ம கிளினிக்’ மருத்துவமனை. இந்தக் கிளினிக்கில் மருத்துவராக அங்கிதா யாராகல் என்ற பெண் பணியாற்றியிருக்கிறார்.
இவர் பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் மேட்டியின் உறவினர். இந்த நிலையில்தான் அவர் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை (PG) மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டே, அரசுப் பணியில் மாதம் ரூ. 70,000-க்கும் அதிகமாக ஊதியம் பெற்று வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியான செய்தியில், மார்ச் 3-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பு எடுத்திருக்கிறார். இதனால் அந்தக் கிளினிக்கிற்கு வரும் ஏழை எளிய பொதுமக்கள் மருத்துவரின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதே நேரத்தில், பணியைப் புறக்கணித்துவிட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்துகொண்டே அரசு ஊதியத்தையும் அவர் தவறாமல் பெற்று வந்துள்ளார். பொது சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் அரசு மருத்துவ விதிகளையும், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தொழில்முறை நெறிமுறைகளையும் மீறியதற்காக இந்த விவகாரம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாகல்கோட் ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி கஜானன் பாலே அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அங்கிதா யாராகல் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.