Tamilnadu
oi-Halley Karthik
கரூர்: இனாம் நிலத்தை பதிவு செய்ய தடையில்லை என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவை வெளியிட்டிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்துக்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள.. ஜோதிமணி எம்பியை மாரியம்மன் தெய்வமாக சித்தரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த போஸ்டரில், ரெக்கை முளைத்த தேவ தூதராக முதல்வர் விஜய் காட்சி தருகிறார் என்பதுதான் ஹைலைட்!
கரூரில் இனாம் நிலமான 3,084 ஏக்கரை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இதையடுத்து புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு, இதற்கு ஒப்புதல் அளித்தது உத்தரவிட்டது.

பஞ்சாயத்தை கிளப்பிய இந்து அமைப்புகள்
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும்.. கோயிலுக்கு சொந்தமானவை! கோயில் நிலத்தை எப்படி தனி நபர்களுக்கு பதிவு செய்ய அனுமதி கொடுக்கலாம்? என்பதுதான் இந்து அமைப்புகளின் கேள்வி. கோயில் நிலங்கள் கோயில்களுக்கு மட்டுமே சொந்தமானவை.. அவற்றை விற்கவும், வாங்கவும் யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி, இந்த பதிவு அனுமதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உண்மை என்ன?
இந்து அமைப்புகள் சொல்வது உண்மைதான். ஆனால், தற்போது பதிவு செய்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலங்கள் கோயில் நிலங்கள் கிடையாது. அது இனாம் நிலங்கள். அதாவது கோயிலில் பணி செய்தவர்களுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் அது. இந்த நிலங்களுக்கு ஏற்கெனவே ராயத்துவாரி பட்டா இருக்கிறது. இப்படி இருக்கையில் கடந்த 1963ம் ஆண்டு போடப்பட்ட சட்டம் காரணமாக, இந்த நிலங்கள் தவறுதலாக கோயில் நிலங்களாக கணக்கில் வைக்கப்பட்டது. இதனால், அப்போது முதல், இந்த நிலத்தின் உரிமையாளர்களால் இதை பயன்படுத்த முடியவில்லை.
நீண்ட கால போராட்டம்
கையில் நிலம் இருந்தும், அதற்கு பட்டா இருந்தும்.. அதை விற்கவோ, வாங்கவோ முடியா நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் இருந்தனர். எனவே சட்டத்தில் ஏற்பட்டிருந்த நிர்வாக பிழையை நீக்கி, நிலத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்களும், இதர அரசியல் கட்சிகளும் நீண்ட காலமாக போராடி வந்தன. இதன் விளைவாகத்தான் தற்போது தவெக அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட பல வலதுசாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
பாஜகவின் எதிர்ப்பு
இருப்பினும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இதர இந்து அமைப்புகளின் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பின்னணியில்தான், அரசின் உத்தரவை வரவேற்று கரூர் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர்.
இந்த போஸ்டரில், “கரூர் மக்களின் நீண்ட கால கனவை நினைவாக்கிய கர்த்தரின் தேவதூதராகிய தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாய் நின்ற கரூர் மக்களின் வீர மங்கை, கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஜோதிமணி அவர்களுக்கும் நன்றி” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போஸ்டர் சர்ச்சை
தமிழக அரசின் உத்தரவுக்கு இங்க நாங்க எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருக்கோம்.. நீங்க என்னடான்னா.. மாரியம்மன், தேவ தூதர்’னு போஸ்ட்டரா ஒட்டுறீங்க? என இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளன. இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டனர் என்றும் டென்ஷனாகியிருக்கின்றனர்.
உண்மையில் தமிழக அரசு போட்ட உத்தரவு வரவேற்புக்கு உரியதுதானா? இந்து அமைப்புகள் சொல்வதை போல விமர்சனத்திற்கு உரியதா? போஸ்ட்டரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?


