India
oi-Vigneshkumar
விசாகப்பட்டினம்: வடகிழக்கு பருவமழை இப்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கூட ஆந்திராவில் இந்த புயல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புயலின் சாட்டிலைட் படங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தீவிரமடைந்து ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை அக்டோபர் 27ம் தேதி மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாட்டிலைட் போட்டோ
இதற்கிடையே இஸ்ரோ சாட்டிலைட்கள் அர்னாப் புயலை படம் பிடித்துள்ளன. வங்கக்கடலில் அர்னாப் புயல் வலுவான மேகங்கள் உடன் காணப்படுகிறது. புயலின் மையப்பகுதியில் சுழற்சி தெளிவாக தெரிவதாகவும், அது வலுப்பெற்று வருவதை படங்கள் காட்டுவதாகவும் வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் அக்டோபர் இன்று நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளை அக்டோபர் 27-ம் தேதி மிக தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அக்டோபர் 28ம் தேதி காலை, ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளுக்கு இடையே, பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில், ஏனாம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயல்
அப்போது மணிக்கு 115 முதல் 125 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 140 கிமீ வரை கூட அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று அதிகாலை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் அர்னாப் புயல் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது அது ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தென்கிழக்கே சுமார் 610 கிமீ தொலைவிலும், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 650 கிமீ தொலைவிலும் இருந்தது. முந்தைய 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடமேற்கு திசையில் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றால் மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் கடலோர உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம். கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களே கவனம்!
புயலின் பாதை, தீவிரம் மற்றும் கரையை கடக்கும் இடத்தை பொறுத்தே பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரிய வரும். எனவே, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். புயல் பாதிப்பு மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டு, கடலோர பகுதிகளில் இருப்போர் வெளியே உத்தரவிட்டிருந்தால்.. அதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த இரண்டு நாட்களில் அர்னாப் புயல் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால், மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.