செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமாக இருந்து வருகிறார் வீரா என்ற வீராசாமி. இத்தகையச் சூழலில் மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் நவீன் மேற்கொண்டு முடித்திருந்தார். அந்தப் பணிக்கான நிலுவைத் தொகையை (Bill Pass) விடுவிப்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் கூகுள் பே (GPay) பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் வீராசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வீராசாமி உடனடியாக நீக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோ மற்றும் அதனைத் தொடர்ந்து கட்சி எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், வீடியோவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.


