லண்டன் பயணத்தை பார்த்தேன்.. எட்டி எட்டிப் பார்த்ததையும் பார்த்தேன்.. விஜயை கலாய்த்த அண்ணியார்..! – Kumudam

Spread the love

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கிறது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி… தலைவர்களின் பிரசாரம்… அனல் பறக்கும் அரசியல் பேச்சுகள் என தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.

இந்த சூழலில் மதுராந்தகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததுடன், அவரது சமீபத்திய லண்டன் பயணம் குறித்தும் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

“அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்று விஜய் சொல்கிறார். இப்போது நீங்கள் முதலமைச்சராகத்தானே இருக்கிறீர்கள்? அடுத்த ஜென்மம் எதற்கு? இந்த ஜென்மத்திலேயே விவசாயிகளுக்கு நல்லது செய்யலாமே?” என்று பிரேமலதா கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விஜய் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர் கடைமடை வரை சென்றதா என கேள்வி எழுப்பிய பிரேமலதா, குறுவை, சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்டா விவசாயிகள் செய்வதறியாமல் தவிப்பதாகவும் கூறினார்.

அடுத்ததாக வந்தது… லண்டன் மேட்டர்!

“விஜய் லண்டன் எதற்காக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் என்னிடம், ‘எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நீங்கள் எல்லாம் எப்படி பார்த்தீர்களோ, அப்படித்தான் நானும் பார்த்தேன்.

நீங்கள் என்னவெல்லாம் பார்த்தீர்களோ, அதையெல்லாம் நானும் பார்த்தேன். எட்டி எட்டிப் பார்த்ததையும் பார்த்தேன். அதை நீங்கள் பார்த்ததையும் பார்த்தேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?” என பிரேமலதா பேசியது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. “எப்படி பார்ப்பேன் என்றால் கண்ணால், டிவியில் பார்ப்பேன். நீங்கள் பார்த்ததைத்தானே நானும் பார்க்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்துப் பேசிய பிரேமலதா, வேலைவாய்ப்பு இல்லை, கடன் சுமை அதிகமாக உள்ளது, சட்டம் ஒழுங்கு சரியில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், விஜய் தொடர்ந்து திமுக மற்றும் மு.க.ஸ்டாலினை விமர்சித்து வருவதாகக் கூறிய அவர், “நீங்கள் இப்போது முதலமைச்சராகிவிட்டீர்கள். இன்னும் தேர்தல் பிரசாரத்தில் பேசுவதைப் போல பேசக்கூடாது. ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். முதலமைச்சராக தமிழ்நாட்டின் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என விமர்சித்தார்.

இப்படி மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விவசாயம் முதல் லண்டன் பயணம் வரை விஜய்யை வைத்து பிரேமலதா பேசியிருப்பது, தேர்தல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *