அரசும் அமைச்சர்களும் தங்களை ஊழலற்ற ‘மிஸ்டர் கிளீன்’களாக மக்கள் மத்தியில் பறைசாற்றிக் கொள்ளவே இது போன்ற சம்பவங்களை மேடைகளில் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் லஞ்ச முயற்சியை சட்ட ரீதியான நடவடிக்கையாக மாற்றாமல், வெறும் விளம்பரப் பேச்சாக மட்டுமே பயன்படுத்துவது அவர்களின் சட்ட விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே காட்டுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏற்கெனவே இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் (திமுக-வின் புகார்), லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்கிறார்களா எனப் பார்க்கலாம்.
ஒரு பொறுப்பான அமைச்சர் தன் துறை சார்ந்த சட்ட திட்டங்களையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் சரியாக அறிந்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர்களுக்குத் தங்களின் அதிகார எல்லை, சட்ட நடைமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே இது போன்றப் பேச்சுகளுக்கு காரணமாக அமைகிறது.

தவெக எம்.எல்.ஏ என்.இளையராஜாவிடம் திமுக தரப்பு குதிரை பேரம் நடத்துகிறது என்றக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்த தவெக அரசு, நிர்வாகத்திற்கு என்று வரும்போது சட்ட ரீதியாக எப்படி யோசித்துச் செயல்பட வேண்டும் என்ற எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். கல்வித்துறை போன்ற மிக உணர்வுப்பூர்வமான ஒரு துறையின் அமைச்சர், தனக்கு வந்த லஞ்சப் புகாரை உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, அதை மேடைப் பேச்சோடு நிறுத்தியிருக்கக் கூடாது.