மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாலி நாட்டின் “தல்ஹான்டெக்’ என்ற நகரில் இருந்து நைஜர் நாட்டை நோக்கி மக்கள் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. நைஜர் எல்லையான அசமகா (Assamaka) பகுதிக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் நடுவே வந்தபோது, அந்த லாரி திடீரென பழுதடைந்து நின்றது. ஓட்டுநர், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகள் இணைந்து வாகனத்தைப் பழுதுபார்க்க தீவிரமாக முயன்றனர்.
ஆனால், கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் லாரியைச் சரிசெய்ய முடியவில்லை. சுட்டெரிக்கும் வெயிலில், குடிநீர் ஆதாரங்கள் எதுவும் இல்லாத பேராபத்தான சூழலில் அவர்கள் பாலைவனத்தின் நடுவே மாட்டிக்கொண்டனர். நாட்கணக்கில் தண்ணீர் கிடைக்காமல் போனதால் உடல் வறட்சி ஏற்பட்டது. தாகத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல், லாரியின் அடியிலும் அதைச் சுற்றிலும் ஒருவர் பின் ஒருவராகச் சுருண்டு விழுந்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.