பதவியை துறக்கும் துரைமுருகன்? திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? – Kumudam

Spread the love

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியபோது, தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக மட்டுமே அறிவித்துக் கொண்டார். காரணம், அந்த இடம் பெரியாருக்கானது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். திராவிடர் கழகத்தின் வழிக்காட்டியாக தந்தை பெரியார் எப்போதும் நீடிக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்கானது என்று அப்பீடத்தை காலியாகவே வைத்திருந்தார் அண்ணா. ஆனால், அண்ணா மறையும் வரை கட்சியின் பொதுச் செயலாளராக அவர் எடுக்கும் முடிவே கட்சியின் முடிவாக இருந்தது. அண்ணாவின் மறைவு வரை திமுகவின் முழு அதிகாரத்தையும் கொண்ட ஒரு பதவி என்றால், அது பொதுச் செயலாளர் பதவி தான். அது திமுகவைவிட அதிமுகவில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்பதே நிதர்சனம்.

அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி திமுகவின் தலைவராக மாறிய நிலையில், அனைத்து அதிகாரங்களும் தலைவருக்கே சென்றது. இருந்தாலும், பொதுச் செயலாளருக்கே நிர்வாகிகள், வேட்பாளர்கள், நடவடிக்கைகள் என அனைத்தையும் கையாலும் அதிகாரம் வழங்கப்பட்டது. அண்ணாவிற்கு பிறகு திமுகவின் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன்(1969 – 77), அன்பழகன் (1977 – 2020), ஆகியோர் இருந்த நிலையில், 2020 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் இருந்து வருகிறார். 

துரைமுருகனை பொறுத்தவரை வயது மூப்புக் காரணமாக அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த போது, துரைமுருகனுக்கு இந்த தேர்தலில் சீட் கொடுத்ததே பெரிய விஷயம் என்றும், அவர் தன்னுடைய வயதை காரணமாக வைத்து அனுதாபத்தால் சீட் பெற்று வாங்கிவிட்டார் என்றும் கூறுகின்றனர். அவருடைய தொகுதி பக்கம் விசாரித்து பாருங்கள் அங்கு எதுவுமே செய்யவே இல்லை, பெயருக்கு பொதுச் செயலாளர் ஆனால் கட்சிக்கும் அவர் எதுவும் செய்யவில்லை என்கின்றனர் அவரது நெருங்கிய உடன்பிறப்புகள். 

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை, கள ஆய்வுக் குழு அறிக்கையாக சமர்ப்பித்த பின், கட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கட்சியின் மாநில நிர்வாகத்தில் யார் யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து, ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். 

அதன்காரணமாக, நமக்கு எப்படியோ ஸ்கெட்ச் ரெடியாகிவிடும் என்று உணர்ந்த துரைமுருகன், தாமாக முன்வந்து பொதுச் செயலாளர் பதவியை துறக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், தேர்தல் தோல்விக்கு பின் துரைமுருகன், கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சரிவர வருவதில்லை என்றும், ஓய்வு எடுக்க விரும்புவதாகவும் கூறும் அவர்கள், தன் பொதுச்செயலர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக கூறுகின்றனர். 

திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலுவை பொதுச்செயலராக்க, கட்சி தலைமை முன்வந்தால், தான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் செல்வேன் என்ற கண்டிஷனோடும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. மறுபக்கம், ஆ.ராசாவிற்கு பொதுச் செயலாளர் பதவிக் கொடுக்கப்படலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். கட்சியைக் கொள்கை ரீதியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தலைமையின் முடிவாக இருப்பதால், ஆ.ராசா இதற்கு பொருத்தமாக இருப்பர் என்று நினைக்கிறதாம். இதற்கு மறுப்பக்கம் எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளனவாம். காரணம், விசிக போன்ற கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கிறேன் என்று பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக ஆ.ராசாவின் பதிவிட்டது தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மறுபக்கம், கனிமொழியை கட்சியின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆ.ராசாவிற்கு நிகரான ஆளுமையும், கொள்கைபிடிப்பு அவருக்கு இருப்பதாகக் கூறுபவர்கள், அவர் கலைஞர் வாரிசும் என்பதால் கனிமொழியையே கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 

எது எப்படியோ, பொதுச் செயலாளராக துரைமுருகன் நீடிப்பதும், விலகுவதும் தலைமையின் கையில் தான் இருக்கிறது. திமுக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *