லீக்கான அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! | US-Iran Deal Leaked: Iran to Get $300 Billion Package, US to Withdraw Troops from Region

Spread the love

International

oi-Prasanna Venkatesh

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பல மாத பதற்றத்துக்குப் பிறகு, இரு நாடுகளும் போர் நிறுத்த அமைதி மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த விபரங்கள் கசிந்துள்ளது. இதில் இருக்கும் விபரங்கள் பார்க்கும் போது அமெரிக்க எப்படி இதற்கு ஒப்புக்கொண்டது என பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த ஆவணம் சர்வதேச அரசியல் மற்றும் எரிசக்தி சந்தைகளில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஈரான் இனி அணு ஆயுதங்களை உருவாக்காது என்று உறுதியளிக்க, அதற்கு பதிலாக அமெரிக்கா ஈரான் மீது பல வருடங்களாக விதித்த பொருளாதாரத் தடைகளை தளர்த்தவும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

us iran deal

14 அம்ச ஒப்பந்தம் திட்டம்

ராய்ட்டர்ஸ் மற்றும் சவுதி ஊடகமான அல் அரேபியா வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்சங்களை கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது என்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

அதே நேரத்தில், ஈரானின் கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மற்றும் வங்கி சேவைகள் மீதான பொருளாதாரத் தடைகளை பேச்சுவார்த்தைக் காலத்திலேயே அமெரிக்கா தளர்த்த ஒப்புக்கொண்டுள்ளது. இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானதும் அமெரிக்கா விதித்த அனைத்து முக்கிய பொருளாதாரத் தடைகளும் நீக்கப்படும் என்றும் வரைவு ஆவணம் குறிப்பிடுகிறது.

300 பில்லியன் டாலர் வளர்ச்சி திட்டம்

இந்த ஒப்பந்தத்தின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, ஈரானின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக குறைந்தபட்சம் 300 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு கொண்ட திட்டத்தை உருவாக்க அமெரிக்காவும் அதன் பிராந்திய கூட்டாளிகளும் ஒப்புக்கொண்டிருப்பதாகும்.

போர் மற்றும் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான விரிவான திட்டம் 60 நாட்களுக்குள் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் மீண்டும் சர்வதேச பொருளாதார அமைப்பில் முழுமையாக இணைய வாய்ப்பு உருவாகலாம்.

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுமா?

உலக எண்ணெய் சந்தைக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் இந்த ஒப்பந்தம் வாயிலாக எடுக்கப்பட உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான உடனே அமெரிக்கா தனது கடற்படை தடையை நீக்கும் என்றும், அதற்கு பதிலாக ஈரான் 30 நாட்களுக்குள் ஹார்முஸ் வழியாக போர் தொடங்குவதற்கு முன்பிருந்த அளவுக்கு கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க அனுமதிக்கும் என்றும் வரைவு ஆவணம் தெரிவிக்கிறது.

இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

60 நாட்களில் இறுதி அணு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஈரானின் அணு திட்டம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து 60 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். தேவையானால் இந்த காலக்கெடுவை இரு நாடுகளும் இணைந்து நீட்டிக்கலாம்.

யூரேனியம் செறிவூட்டல், ஏற்கனவே செறிவூட்டப்பட்ட பொருட்களின் எதிர்காலம் மற்றும் ஈரானின் அணு ஆற்றல் தேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவகாரங்களும் இறுதி ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறுமா?

இந்த ஆவணத்தில் இருந்து கசிந்த மற்றொரு முக்கிய தகவல், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் “ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில்” இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெறும் என்ற உறுதிமொழியாகும்.

எந்த பகுதிகள் என்பதைக் குறிப்பிடவில்லை என்றாலும், தற்போது அமெரிக்கா சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஈராக், சிரியா, பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ தளங்களை வைத்துள்ளது. இதை எப்படி அமெரிக்கா ஒப்புக்கொண்டது என்பது தான் அனைவரின் முக்கிய கேள்வியாக உள்ளது.

போர் முடிவுக்கு வருமா?

ஜூன் 19-ஆம் தேதி ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் ஈரான் உயர் அதிகாரிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என ஆவணம் தெரிவிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *