Last Updated:
வசூல்வேட்டை ஒருபக்கம் இருந்தாலும், ‘பெத்தி’ திரைப்படம் தற்போது ஒரு முக்கிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் (RRR) படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, உலகளாவிய ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ராம் சரணின் ‘பெத்தி’ (Peddi) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வெளியாகி முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ. 236.7 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பெத்தி’ திரைப்படம் அதன் முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ.51 கோடிக்கும் மேல் வசூலித்து அதிரடியான தொடக்கத்தைப் பெற்றது. முதல் இரண்டு நாட்களிலேயே உலகளாவிய மொத்த வசூலில் ரூ. 150 கோடி என்ற இலக்கைக் கடந்த இந்தத் திரைப்படம், மூன்றாவது நாளான இன்று சற்று வேகம் குறைந்தாலும் திருப்திகரமான வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், வரவிருக்கும் வார நாட்களிலும் நிலையான வசூலைப் பெற்றால் மட்டுமே லாபகரமான நிலையை எட்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
வசூல்வேட்டை ஒருபக்கம் இருந்தாலும், ‘பெத்தி’ திரைப்படம் தற்போது ஒரு முக்கிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரின் சில காட்சிகள், அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்திக் காட்டுவதாகவும், ஆபாசமாக சித்தரிப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ரசிகர்களின் இந்த எதிர்ப்பை அடுத்து, இயக்குநர் புச்சி பாபு சனா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அதில், “மக்களின் கருத்துக்களைப் பரிசீலித்த பிறகு, சர்ச்சைக்குரிய அந்தக் குறிப்பிட்ட காட்சிகளில் உரிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளோம். சினிமா என்பது பார்வையாளர்களுடன் கொண்ட தொடர்பின் மூலமே வளர்கிறது. எங்களுக்கு, சமூகத்தின் மாறிவரும் பார்வைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராம் சரணின் முந்தைய படங்களான ‘ஆச்சார்யா’ மற்றும் ரூ. 450 கோடிக்கும் அதிக பட்ஜெட்டில் உருவான ‘கேம் சேஞ்சர்’ ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ரவி கிஷன், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த ‘பெத்தி’ திரைப்படம் ராம் சரணுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக்கை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் உள்ளனர்.
