வந்தே மாதரம் பாடல்: 6 பத்திகளையும் கட்டாயமாக்கும் புதிய மசோதா… பாடாமல் மௌனமாக இருக்க உரிமை உண்டா..? | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Spread the love

வங்கத்து கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் முதன்முதலில் 1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ‘பங்காதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியானது. பின்னர் இது 1882-இல் வெளியான அவரது புகழ்பெற்ற நாவலான ‘ஆனந்த மடம்’ (Anandamath) நூலில் இணைக்கப்பட்டது.

இந்தப் பாடலுக்கு நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். அவரே 1896-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடலை முதன்முறையாகப் பாடினார்.

1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி, வங்கப் பிரிவினைக்கு எதிரான சுதேசி இயக்கத்தின் போது,  மாணவர்கள் பேரணியில் முதன்முதலாக ‘வந்தே மாதரம்’ முழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு எதிரான அரசியல் முழக்கமாக விளங்கியது. அதே ஆண்டில் வாரணாசி இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், அகில இந்திய அளவிலான அனைத்து தேசிய நிகழ்வுகளிலும் பாடுவதற்கான அதிகாரப்பூர்வப் பாடலாக ‘வந்தே மாதரம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1937-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே தேசியக் கூட்டங்களில் பாடுவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ராஜேந்திர பிரசாத் முன்மொழிய, சர்தார் வல்லபாய் படேல் வழிமொழிந்தார்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய இப்பாடலின் தொடக்க இரண்டு பத்திகள், தாய்நாட்டின் வளமார்ந்த நீர்நிலைகள், செழுமையான கனிகள், இதமான தென்றல் போன்ற இயற்கை எழிலையும், மக்களின் கூட்டு வலிமையையும் போற்றுகின்றன. எனினும், அடுத்தடுத்த பத்திகளில் தாய்நாடானது துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து தெய்வங்களாக உருவகிக்கப்பட்டு, அவர்களின் ஆயுதங்கள் மற்றும் அருளாசியோடு நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பன்முகத்தன்மைக்கும், பல்திறப்பட்ட மக்களுக்கும் பொதுவானதாக இப்பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே உள்ளன என்பதை ஏற்றுக்கொண்ட இரவீந்திரநாத் தாகூரும், பாடலை இரண்டு பத்திகளாகச் சுருக்குவதை ஆதரித்தார்.

ஜனவரி 24, 1950 அன்று, அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ‘ஜன கண மன’ பாடலை தேசிய கீதமாகவும், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அதற்கு இணையான சிறப்பந்தஸ்தும் வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி, அரசமைப்பு நிர்ணய சபை வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ‘தேசியப் பாடலாக’ ஏற்றுக்கொண்டது.

1976-ஆம் ஆண்டு 42-வது அரசமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட ‘அடிப்படை கடமைகள்’   பிரிவான 51A(a)-இல், “நாட்டுக் கொடு, நாட்டுப் பண் இவற்றை மதித்து நடத்தல் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாக அறிவித்தது. இதில், நாட்டுப் பாடலான வந்தே மாதரம் இடம்பெறவில்லை.

1971 வருட தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம், தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசமைப்பு ஆகியவற்றை அவமதிப்பதிலிருந்து பாதுகாக்கிறது. இருப்பினும், இச்சட்டத்தின் கீழ் ‘வந்தே மாதரம்’ பாடல் கொண்டுவரப்படவில்லை. இச்சட்டத்தின் கீழ், தேசிய கீதம் பாடுவதைத் தடுப்பது போன்ற குற்றங்களுக்காக ஒருவர் தண்டிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மை கருதி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951)-இன் கீழ் அவர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்தோ அல்லது பதவியைத் தொடர்வதிலிருந்தோ தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

1985-ஆம் ஆண்டு கேரளாவில் ‘ஜெகோவாவின் சாட்சிகள்’ மதப்பிரிவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தேசிய கீதம் பாடும்போது பாடாமல் அமைதியாக நின்றதற்காகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவர்களை நீக்கியது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனத் தீர்ப்பளித்தது. தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பதே அதற்குச் செலுத்தும் தகுந்த மரியாதையாகும். மற்றவர்களோடு சேர்ந்து பாடாமல் அமைதியாக நிற்பது எந்த வகையிலும் அவமதிப்பு ஆகாது என உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. ஒருவரைப் பாடக் கட்டாயப்படுத்துவது அரசமைப்பு வழங்கும் பேச்சுரிமை மற்றும் மதச் சுதந்திரத்தை  மீறும் செயலாகும் என்றும் தெரிவித்தது.

இதற்கிடையே, கடந்த ஜனவரி 28, 2026 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், அரசு விருது வழங்கும் விழாக்கள், குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று விழாக்கள் அனைத்திலும் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுமையான 6 பத்திகளையும் இசைக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் சமூகப் பாடலாகப் பாடப்பட வேண்டும் என்றும், அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *