கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லாடி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் சிக்கியுள்ளனர். போக்குவரத்திற்காக இரட்டை சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு நிலச்சரிவாக மாறியிருக்கிறது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அருகில் இருந்த மக்கள் இதில் சிக்கியுள்ளனர். ஆர்ப்பரித்து வந்த நிலச்சரிவு இடிபாடுகளில் இருந்து சிலர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். மண்ணில் புதையுண்டவர்களை உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்டும், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காயமுற்ற 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த பலர் மாயமானதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கேரளம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தும் பேரிடர் மீட்பு குழுவினர் வயநாட்டிற்கு விரைந்து வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாயமானவர்களை மண்ணுக்குள் தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வயநாடு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.