வருமான வரித்துறைக்கு முன்கூட்டிய வரி ரூ.1.79 லட்சம் கோடி.. ஒரே ஆண்டில் நடந்த பெரிய மாற்றம் | Income Tax Sets New Record: Advance Tax Crosses ₹1.79 Lakh Crore with a Blockbuster 15% Growth

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: நடப்பு 2026-27 நிதியாண்டிற்கான முதல் தவணை முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் வரி) வசூல் 15.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.79 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 17 வரை நிகர நேரடி வரி வசூல் 14.64 சதவீதம் உயர்ந்து ரூ.5.21 லட்சம் கோடியாக உள்ளது. இதில், நிகர நிறுவன வரி வசூல் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ.2.08 லட்சம் கோடியாகவும் உள்ளது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, சந்தை ஏற்ற இறக்கங்கள் எனப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் தனது அசைக்க முடியாத வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டின் தொடக்கமே இந்திய நிதித்துறைக்கு ஒரு பிரம்மாண்டமான திருவிழாவாக மாறியிருக்கிறது. ஜூன் 17-ம் தேதியுடன் நிறைவடைந்த முதல் தவணை முன்கூட்டிய வரி (Advance Tax) வசூல், கடந்த ஆண்டை விட 15.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.79 லட்சம் கோடியைத் தொட்டு சாதனை படைத்திருக்கிறது

Income Tax Sets New Record Advance Tax Crosses 1 79 Lakh Crore with a Blockbuster 15 Growth

கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வெறும் 4 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி, தற்போது 15 சதவீதத்தைக் கடந்து சீறிப்பாய்ந்திருப்பது, நாட்டின் தொழில் துறை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அசுர வேகத்தில் மீண்டெழுந்திருப்பதன் நேரடி சான்றாக பார்க்கப்படுகிறது.

இந்த அட்வான்ஸ் வரி வசூலின் முதுகெலும்பாகத் திகழ்வது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். நிறுவனங்களிடம் இருந்து வசூலான முன்கூட்டிய வரி 16 சதவீதம் உயர்ந்து ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரம், தனிநபர்கள் மற்றும் கூட்டுக் குடும்பங்கள் உள்ளிட்ட நிறுவனமல்லாத வரி செலுத்துவோரும் சளைக்காமல் 12.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ.37,620 கோடியை வரியாகச் செலுத்தி உள்ளார்கள்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஏப்ரல் 1 முதல் ஜூன் 17 வரையிலான நாட்டின் நிகர நேரடி வரி வசூல் 14.64 சதவீதம் உயர்ந்து ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதில் பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி (STT) வசூல் மட்டும் 46.15 சதவீதம் எகிறி ரூ.19,000 கோடியாக உயர்ந்துள்ளது, இந்தியப் பங்குச்சந்தையில் சாமான்ய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை கொட்டிக் கிடக்கும் அசாத்திய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஆண்டு அரசு மேற்கொண்ட வரி விகிதக் குறைப்பு நடவடிக்கைகளின் தற்காலிகத் தாக்கங்களை முற்றிலும் தவிடுபொடியாக்கிவிட்டு, இந்திய வரி வசூல் மீண்டும் ஒரு வலுவான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. வரி செலுத்துவோருக்கு ரூ.89,026 கோடி ரீஃபண்ட் (திருப்பிச் செலுத்துதல்) வழங்கப்பட்ட பிறகும் இந்த அசாத்திய வளர்ச்சியை எட்டியிருப்பது, வெளிப்படையான டிஜிட்டல் பொருளாதார முறையின் மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *