வளர்ச்சியின் பலன் உழைக்கும் மக்களுக்கும் சென்றடைய வேண்டாமா?

Spread the love

தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு எனப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாட்டின் வளர்ச்சியில் நிறுவனங்கள் தங்களுக்கான பங்கை எடுத்துக்கொள்ளும் இந்த நிறுவனங்கள், சமூகத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனவா என்பது விவாதிக்க வேண்டிய கேள்வி.

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிச் சுமையைக் குறைத்தோம்; தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தினோம். ஆனால், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினவா, வேலைவாய்ப்புகளை உருவாக்கினவா?’ என்ற அவரது கேள்வி முக்கியமானது.

கடந்த 2019-ம் ஆண்டு கார்ப்பரேட் வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளும், பல்வேறு கொள்கை ஆதரவுகளும் வழங்கப்பட்டன. ஆனால், இந்தச் சலுகைகள் எந்த அளவுக்கு வேலைவாய்ப்புகளாகவும், ஊதிய உயர்வாகவும், புதிய உற்பத்தித் திறனாகவும் மாறியிருக்கின்றன?

ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் பெருநிறுவனங்களின் லாபம் அதிகரித்திருக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கான ஊதிய வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளின் அதிகரிப்பும் அதற்கேற்ப இல்லை என்கிறது ’ராய்ட்டர்ஸ்’ ஆய்வு. மறுபுறம், 2012 – 2024 வரையிலான காலகட்டத்தில் பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் தொழிலாளர்களின் ஊதியம் சரிந்திருக்கிறது. அதோடு, உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் கவலை அளிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், நாட்டின் மொத்த உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. பெரும்பாலான துறைகளில் இன்னும் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம்.

நாட்டின் நேரடி வரி வருவாயில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு குறைந்து, தனிநபர் வருமான வரியின் பங்கு அதிகரித்திருப்பதும் கவனிக்கப்பட வேண்டும். பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டலாம். ஆனால், அந்த லாபம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதிலும், தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பங்களிக்க வேண்டும்.

சலுகைகளைப் பெறுவதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் பெருநிறுவனங்கள் காட்ட வேண்டும். அதை அரசும் உறுதிசெய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது பங்குச் சந்தைக் குறியீடுகளிலும் பெருநிறுவனங்களின் லாபக் கணக்குகளிலும் மட்டும் இல்லை. ஒரு சாமானியக் குடும்பத்தின் வருமானம் உயர்கிறதா, ஓர் இளைஞருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கிறதா என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

பிரதமரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை கார்ப்பரேட் உலகத்துக்கு இருக்கிறது!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *