டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பூட்டிய வீட்டிற்குள் தபோஸ்மிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து அப்பெண்ணின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு முகக்கவசம் அணிந்த ஒரு தம்பதி குழந்தையுடன் வந்தது அக்கட்டடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் நான்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தன்று அக்கட்டடத்திற்கு வந்த 200 பேர் பற்றிய விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.
அவர்களில் 13 பேர் மட்டும் இறுதி விசாரணைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருவர்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று போலீஸார் கருதினர். போலீஸாரின் விசாரணையில் அக்கட்டடத்திற்கு சம்பவத்தன்று ஒரு டாக்ஸி வந்துள்ளது. அந்த டாக்ஸி நீண்ட நேரம் கட்டடத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தது.
கட்டடத்திற்குள் குழந்தையுடன் சென்ற ஒரு தம்பதி திரும்பி வந்தபிறகு அந்த டாக்ஸி புறப்பட்டு சென்றது. அந்த டாக்ஸி டிரைவரை பிடித்து அதில் பயணம் செய்தவர்கள் விவரங்களைச் சேகரித்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,”‘கொலையாளிகள் மேற்கு வங்க மாநிலம், பர்தமானில் வசிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணை சந்திப்பதாக அத்தம்பதி 1,400 கிலோமீட்டர் பயணம் செய்து டெல்லி வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகமூடி அணிந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிளாட்டுக்குச் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அவர்கள் ஒரு தனியார் டாக்ஸியில் சில பைகளுடன் வந்து ஆறாவது தளத்தை அடைய லிஃப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தினர்.