
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, மத்திய பிரதேசத்தில் ஏழை மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளிம்புநிலை மக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு கும்பல், தங்களை முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளது.
தொழில் தொடங்குவதற்கான கடன்கள், வங்கிக் கணக்குகள் தொடங்குதல், கல்விக் கடன் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான நிதியுதவிகளைச் செய்து தருவதாக அவர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
இந்த உதவிகளைப் பெற வேண்டும் என்றால் முதற்கட்டமாகச் சரிபார்ப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் மற்றும் செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பொதுமக்கள் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை அக்கும்பலிடம் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
பணம் செலுத்திய நீண்ட நாட்களுக்குப் பிறகும் எந்தவித நிதியுதவியும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறையை நாடியுள்ளனர்.
இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் இதுவரை 6 அதிகாரப்பூர்வப் புகார்கள் வந்துள்ளதாகக் கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்துள்ளார். காவல் துறை தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில், இது திட்டமிடப்பட்ட சைபர் மோசடி என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையும் இணைந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போலியான அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.