விஜய் ரூட்டில் தனுஷ்? 5 ஆண்டுகளுக்கான அரசியல் திட்டம்… கோவையில் நடந்தது என்ன? – Kumudam

Spread the love

நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் ஆளுங்கட்சியான த.வெ.க.வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது நிதியமைச்சர் மரிய வில்சனின் பேட்டி. ‘அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனுஷ் ஒரு முடிவெடுத்திருக்கிறார். களத்திற்கு வந்தாலும் முதல்வர் விஜய்க்கு அவர் போட்டியாளராக இருக்கமாட்டார்’ என்று மரிய வில்சன் கூறியிருப்பதன் பின்னணியில் கோவை மீட்டிங் பிரமாண்டம் இருப்பதுதான் இன்றைய தேதியில் அரசியல் ஹாட் டாக்.

கடந்த அக்டோபர் 14ம் தேதி கோவை, சரவணம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றார்கள். அந்த அரங்கில் திரும்பிய பக்கமெல்லாம் தனுஷ் படங்கள் ஒட்டப்பட்டு, அவரது அதிரடியான பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒருநாள் முழுவதும் நடந்த இக்கூட்டத்தின் ஒரு புகைப்படம் கூட வெளியே கசியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

அப்படி உள்ளே என்னதான் நடந்தது, எதற்காக இந்த கூட்டம்? இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்தவரில் ஒருவரான கோவை பிரமுகரிடம் பேசினோம். -கோவை லாட்டரி குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆல்பர்ட் என்பவர்தான் இந்த நிகழ்ச்சிக்கான முழு பொறுப்பையும் ஏற்றிருந்தார். அதாவது ஒரு மாதத்திற்கு முன்பே சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனுஷ் வீட்டில் ஆல்பர்ட்டும் தனுஷும் பல மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

அதாவது ‘மக்களுக்கு பிடித்தமான கலைஞர், ஜெயலலிதா என யாருமே இல்லாத இன்றைய சூழலில், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி விஜய் முதல்வர் ஆகிவிட்டார். ஜெயலலிதா இறந்த பிறகு உங்கள் மாமனார் அரசியலுக்கு வருவதாக  அறிவித்திருந்தார். பிறகு பின்வாங்கி விட்டார். அவர் வந்திருந்தால் அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார். உங்களுக்கு 43 வயது. ஆறு தேசிய விருது வாங்கிட்டீங்க. சினிமால என்ன சாதிக்கணுமோ எல்லாத்தையும் சாதிச்சுட்டீங்க. இந்த அஞ்சு வருஷம் உங்க படங்கள்ல அதிரடி அரசியல் வசனங்களை பேசி நடிச்சு, அப்படியே அரசியல்ல இறங்கிட்டா நிச்சயம் அடுத்த தேர்தல் நம்ம கையிலதான் இருக்கும். தனியா களமிறங்க சாதகமான சூழல் இல்லாட்டி கூட்டணி பத்தி அப்போ முடிவு பண்ணிக்கலாம்.

‘விஜய் மூணு தொகுதிக்கு மேல ஜெயிக்க முடியாதுன்னு உறுதியா சொன்னாங்க. ஆனா கடைசியில் அந்த பேச்சே கேலிக்குரியதாகிவிட்டது. அதே மாதிரிதான் நீங்க அரசியலுக்கு வரும்போதும் ‘இவரெல்லாம் சாதிக்க முடியாதுன்னு சொல்வாங்க ஆனா, விஜய்க்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். அதனால தயங்காம அரசியலுக்கு வாங்க, உங்க மாமனார் செய்யாததை உங்களால சாதிக்க முடியும் நாம யாரோட கூட்டணின்னு சொன்னாலும் கண்டிப்பா நம்மளை அவங்க சேர்த்துக்குவாங்க. நீங்க இப்போ தலையசைச்சா மட்டும் போதும். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்’ என ஆல்பர்ட் சொன்னதற்கு தனுஷும் தலையை ஆட்டியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 9ம் தேதி தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு வந்த கொஞ்ச நேரத்துல, தமிழ்நாட்ல உள்ள எல்லா தனுஷ் ரசிகர் மன்றங்களையும் தொடர்புகொண்டு, ‘வர்ற அக்டோபர் 14ம் தேதி கோவையில நிகழ்ச்சி நடக்குது. முக்கிய அறிவிப்பும் வெளியாக இருக்குது’ன்னு சொல்லி எல்லாரையும் வர வெச்சோம். ரெண்டாயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க. அங்கே நடக்குறது வெளியே தெரியாம இருக்க எல்லாரோட செல்லையும் வாங்கி வெச்சிக்கிட்டோம்.

லயோலா காலேஜ்ல முதல்வர் விஜய்க்கு ஆசிரியரா இருந்தவரும், பின்னர் பிரபல டி.வி. தொகுப்பாளரா மாறி, அப்பறம் அ.தி.மு.க. எம்பியா பதவி வகித்த பிரமுகர்தான் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். தனுஷ் அரசியலுக்கு வரணும் அவர் அரசியலுக்கு வந்தா என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பது பற்றி மிக விளக்கமா அவர் பேசினார். ஈரோட்டைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதிய இடைவேளையில் எல்லாருக்கும் கொங்கு நாட்டு பிரியாணி உள்ளிட்ட அசைவ விருந்து பரிமாறப்பட்டது. பிறகு தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்த நிர்வாகிகள் தங்களது கருத்தை சொன்னாங்க.

முதற்கட்டமா தமிழ்நாடு முழுக்க உள்ள மாவட்டத் தலைநகரங்கள் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சு படிப்படியா வேலைவாய்ப்பு முகாம், பெண்கள் முன்னேற்றம்னு மக்கள் நலத்திட்டங்களை செய்ய ஆரம்பிக்க போறோம். இந்த நிகழ்ச்சிக்கு துபாய், அபுதாபில இருந்து ஐந்து தொழிலதிபர்கள் வந்திருந்தாங்க. தனுஷ் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது மிகப்பெரிய பொருளுதவி செய்ய அவங்க தயாரா இருக்காங்க.

தனுஷ் நடிச்ச ‘ஓம்’ படத்தோட ஆடியோ ரிலீஸ் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துல நடக்குறதா இருந்தது. ஆனா, அங்க அந்த விழாவை நடத்த அனுமதி தரலை. நண்பர் இப்போ வேற இடம் தேடிட்டு 2 இருக்கோம். லாட்டரி குடும்பத்துல இயக்கம் பெண் எடுத்திருக்கிற உயரமான அமைச்சர், அந்த குடும்பத்துடன் மோதல் போக்கை கையாண்டு வருவதால், கோபமான அந்த குடும்பத்தார் எடுத்த திடீர் முடிவுதான் தனுஷின் அரசியல் அவதாரத்தை தூக்கி பிடிக்கிறது. தொடர்ந்து மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு பண்ணிருக்காங்க” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க ஆல்பர்ட்டை பலமுறை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய அவரின் உதவியாளர், “சார் பிசியா இருக்கார்” என சொல்லி கட் செய்துவிட்டார். இதற்கிடையே, கடந்த அக்டோபர் 23ம் தேதி நடிகர் தனுஷின் அரசியல் கட்சி தொடக்கம் குறித்து சென்னையில் நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘தனுஷ் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், அவர் முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் போட்டியாளராக மாறவே முடியாது என்று கிண்டல் அடித்திருப்பதன் மூலம் தனுஷின் அரசியல் பிரவேசம், ஆளுங்கட்சிக்கு பயத்தை காட்டியிருக்கிறது என்கிறார்கள்.

விஜய்யின் ரூட் எல்லாருக்கும் வொர்க் அவுட் ஆகுமா? பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *