விண்வெளியில் 49 ஆண்டுகள்: 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வாயேஜர் 1 சாதனை! | Voyager 1 Reaches One Light-Day From Earth After 49 Years in Space

Spread the love

1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 (Voyager 1) விண்கலம், தற்போது பூமியிலிருந்து சுமார் 1,600 கோடி மைல்கள் தொலைவில் பயணித்துக்கொண்டிருக்கிறது. 49 ஆண்டுகளைக் கடந்தும் தகவல்களை அனுப்பிவரும் இந்த விண்கலம், தற்போது பூமியிலிருந்து “ஒரு ஒளி நாள்’ (One Light-Day) தொலைவு என்ற புதிய நிலையை எட்டியுள்ளது.

விண்வெளி தொடர்பான செய்திகளில் ‘ஒளி ஆண்டு’ (Light-Year) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோலத்தான் ‘ஒளி நாள்’ என்பதும். இது கால அளவு அல்ல; தூரத்தைக் குறிக்கும் அளவீடு.

ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த வேகத்தில் 24 மணி நேரத்தில் ஒளி கடக்கும் தூரம்தான் ஒரு ஒளி நாள். அதாவது, சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் (1,609 கோடி மைல்கள்).

2026 நவம்பர் 18 அன்று காலை 5.16 மணிக்கு (அமெரிக்க கிழக்குக் கடற்கரை நேரம்), வாயேஜர் 1 இந்தத் தொலைவை எட்டியதாக நாசாவின் (NASA) கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த முதல், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் என்ற நிலையை இது அடைந்துள்ளது.

வாயேஜர் 1-ன் வேகம் மணிக்கு சுமார் 61,000 கிலோமீட்டர். இவ்வளவு வேகத்தில் பயணித்தும் இந்தத் தொலைவை அடைய கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த எல்லை விண்கலத்தின் சுற்றுப்புறத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், மனிதர்கள் உருவாக்கிய ஒரு பொருள் எவ்வளவு தொலைவு சென்றிருக்கிறது என்பதைக் காட்டும் முக்கியமான அளவீடாக இது அமைகிறது.

1977 செப்டம்பர் 5-ம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வாயேஜர் 1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. வியாழன், சனி உள்ளிட்ட வெளிப்புறக் கோள்களை நெருக்கமாக ஆய்வு செய்வதே இதன் முதன்மை நோக்கம். வாயேஜர் 1-க்கு இணையாக வாயேஜர் 2 என்ற மற்றொரு விண்கலமும் அதே ஆண்டில் ஏவப்பட்டது.

வாயேஜர் 1, 1979-ல் வியாழன் கோளையும், 1980-ல் சனிக் கோளையும் கடந்து சென்றது. இந்தப் பயணத்தின்போது அந்தக் கோள்களின் வளிமண்டலம், காந்தப்புலம், நிலவுகள் உள்ளிட்டவை குறித்த முக்கியமான தரவுகளையும் புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியது.

அதன்பிறகு அதன் பயணம் வெளிப்புற விண்வெளியை நோக்கித் தொடர்ந்தது. 2012 ஆகஸ்ட் மாதத்தில் சூரியக் குடும்பத்தைச் சுற்றியுள்ள ஹீலியோஸ்பியர் (Heliosphere) எனப்படும் பாதுகாப்பு எல்லையைக் கடந்தது. சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்கள் உருவாக்கும் இந்தப் பகுதியைத் தாண்டி, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிக்குள் (Interstellar Space) நுழைந்த முதல் விண்கலம் என்ற பதிவையும் ஏற்படுத்தியது. இன்றுவரை அந்தப் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து தகவல் அனுப்பும் விண்கலங்களாக வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 மட்டுமே உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *